`அமைதியில் கோபாலபுரம்!' - ஏக்கத்தோடு வந்துசெல்லும் தொண்டர்கள் | No celebration in Karunanidhi's gopalapuram house over DMK's election victory

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (24/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (24/05/2019)

`அமைதியில் கோபாலபுரம்!' - ஏக்கத்தோடு வந்துசெல்லும் தொண்டர்கள்

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் இந்த வெற்றியைக் கொண்டாடாமல் தொண்டர்கள் கோபாலபுரம் வந்து செல்கிறார்கள்.

கோபாலபுரம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மீண்டும் பலமாக ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. தமிழகத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில், 38-ல் வெற்றியை ருசித்திருக்கிறார்கள். அதில் தி.மு.க மட்டும் 23 தொகுதிகள் வெற்றி பெற்றிருக்கிறது.  அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது.

``இந்த வரலாற்று வெற்றியிலும் ஒரே ஒரு கவலை இருக்கிறது. அது, வெற்றியைப் பார்க்க தலைவர் இல்லையே'' என்று கருணாநிதி குறித்துப் பகிர்ந்துகொண்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். தி.மு.க தேர்தலில் வெற்றி பெறும்போதும், அக்கட்சியின் தலைவர்களின் பிறந்தநாள்களின்போதும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் களைகட்டும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனத் திருவிழாவாக கொண்டாடியிருப்பார்கள் தொண்டர்கள். ஆனால், நேற்று  தி.மு.க-வின் வெற்றிக் கொண்டாட்டம், ஆழ்வார்பேட்டை ஸ்டாலின் வீடு மற்றும் அண்ணா அறிவாலயத்தோடு முடிந்துவிட்டது. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அமைதியாக இருக்கிறது. ``கலைஞர் இருந்திருந்தால்...!'' என்று ஏக்கத்தோடு கருணாநிதியின் வீட்டைக் கடந்து செல்கிறார்கள் தொண்டர்கள். சிலர் வீட்டுக்குள் சென்று கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.