30 ஆண்டுகளுக்குப் பின் ஓட்டப்பிடாரத்தில் தடம்பதித்த தி.மு.க! - அ.தி.மு.க கோட்டை தகர்ந்த பின்னணி | ADMK wins Ottapidaram constituency after 30 years

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (24/05/2019)

30 ஆண்டுகளுக்குப் பின் ஓட்டப்பிடாரத்தில் தடம்பதித்த தி.மு.க! - அ.தி.மு.க கோட்டை தகர்ந்த பின்னணி

அ.தி.மு.க கோட்டை எனச் சொல்லப்பட்டு வந்த ஓட்டப்பிடாரம் தனித் தொகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க கால் ஊன்றியுள்ளது. 7 அமைச்சர்கள் முகாமிட்டு வேலை செய்தும், ஓட்டுக்குப் பணம் கொடுத்தும் தோல்வி அடைந்துவிட்டோமே என கடும் அப்செட்டில் உள்ளனர் அ.தி.மு.க-வினர். 

வெற்றிச் சான்றிதழ் பெறும் தி.மு.க வேட்பாளர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பின் தங்கியது ஓட்டப்பிடாரம் தனித்தொகுதி. இத்தொகுதியில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க 4 முறையும், புதிய தமிழகம் 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தி.மு.க-வும், இந்திய கம்யூனிஸ்ட்டும் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 6 தேர்தல்களில் அ.தி.மு.க, புதியதமிழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும்தான் போட்டி நிலவி வந்தது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் புதியதமிழகம் கூட்டணியில் இருந்ததாலும், ஆளுங்கட்சி, அதிகார பலம் ஆகியவற்றால், ஈஸியா ஜெயிச்சுடலாம் எனத் தப்புக்கணக்கு போட்டுவிட்டனர் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க வேட்பாளர் மோகனைவிட 19,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  தி.மு.க வேட்பாளர் சண்முகையா.

அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, ``இந்த வேட்பாளரை மாற்ற வேண்டும். இவர் தகுதியில்லாதவர்” எனச் சொல்லி ஒட்டப்பிடாரம் ஒன்றிய இளம்பெண்கள் பாசறை தலைவி ஜெயலலிதா, தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். சீட் கிடைக்காததால் சில நாள்கள் ஒதுங்கியே இருந்தார் நெல்லை-தூத்துக்குடி ஆவின் சேர்மன் சின்னதுரை. ஜெயலலிதாவையும், சின்னத்துரையையும் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டுகொள்ளவில்லை. பிரசாரத்துக்கு வந்த மற்ற அமைச்சர்கள் பேசி சமாதானம் செய்தாலும், இருவர் தரப்பு ஆதரவாளர்களும் அதிருப்தியிலேயே இருந்தனர். அதிருப்தியில் இருந்தார்கள் என்பதைவிட அமைதியாக ஒதுங்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

வைகோ பிரசாரம்

அமைச்சர் காமராஜ் தலைமையில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், மணிகண்டன், சேவூர் ராமச்சந்திரன், ராஜலெட்சுமி ஆகிய 7 அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டு தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்துக்குச் செல்லும் பகுதிகளில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், ``தேர்தல் முடியட்டும் உடனே செஞ்சுடுவோம். இவ்வளவுதானா.. ஓ.கே முடிச்சிடலாம்” எனச் சொல்லியே வந்தனர். அந்தோணியார்புரம் பகுதியில் உள்ள ஆர்.சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட ஊர் மக்கள் கோரிக்கை வைத்ததுமே, ``நானும் ஆர்.சி ஸ்கூல்லதான் படிச்சேன். தேர்தல்ல ஜெயிச்சதும் பள்ளி நிர்வாகிகள் ஒருநாள் கோட்டைக்கு வாங்க. முதலமைச்சர்கிட்ட சொல்லி ஓ.கே பண்ணிடலாம். நீங்க, ஒரு காபி குடிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆர்டர் ரெடி ஆயிடும்.” என அமைச்சர் விஜயகுமார் அள்ளிவீசிய ஒரு ஆன்  தி ஸ்பாட் வாக்குறுதியே உதராணம்.

`மோகனுக்கு சீட் கொடுத்ததற்குப் பதில், வேறு யாருக்காது சீட் கொடுத்திருந்தால் அ.தி.மு.க ஜெயிச்சிருக்கும். சின்னத்துரை, ஜெயலலிதாவின் அதிருப்தி நியாயமானதுதான்' என வருத்தப்பட்டாராம் அமைச்சர் கடம்பூர் ராஜு. விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றபோதும், ஒட்டப்பிடாரம் கைவிட்டுப் போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அ.தி.மு.க-வினர்.

பிரசாரத்தில் கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், காமராஜ், ராஜலெட்சுமி உள்ளிட்டோர்  

இத்தொகுதியின் தி.மு.க பொறுப்பாளாரான கே.என்.நேரு தொகுதிக்குள் வந்ததுமே மாவட்ட தி.மு.க-வில் இரு துருவங்களாக இருந்த கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவரையும் அழைத்து ``இந்தத் தொகுதியில ஒரே ஒருதடவதான் நம்ம கட்சி ஜெயிச்சிருக்கு. அந்த நேரத்துல அ.தி.மு.க இரண்டு அணியாப் பிரிந்ததால் நமக்கு வெற்றி கிடைச்சுது. இந்த முறையும் அந்தக் கட்சி இரண்டாத்தான் கிடக்கு. இப்போ வெற்றி பெற முடியாட்டா, எப்பவுமே இங்க வெற்றி பெற முடியாது. இதுவரை மாவட்டத்துல நீங்க எப்படி இருந்தாலும் பரவாயில்ல. இனிமேல் இணைந்து செயல்படணும்”னு சொல்லி கோஷ்டிப்பூசலுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் நேரு.

ஸ்டாலின், கனிமொழி பிரசாரம்

தெற்கு மாவட்டச் செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க-வில் மாவட்டச் செயலாளராக ஆன பிறகு அவரது பொறுப்பு எல்லைக்குள் நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் தொகுதியை தி.மு.க வசமாக்கி ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியிடம் நல்லபெயர் எடுத்ததுபோல ஸ்டாலினின் குட்புக்கிலும் இடம் பிடிக்க பம்பரமாக சுழன்று வந்தார். சண்முகையாவின் அண்ணன் இளவேலங்கால் அ.தி.மு.க ஊராட்சி செயலரான ஆயிரவன்பட்டி முருகேசன், தம்பியின் வெற்றிக்காக ஒருபக்கம் மறைமுகமாக ஆதரவு திரட்டி வந்தார். விஷயமறிந்த மாவட்டச் செயலாளர் கடம்பூர் ராஜு, முருகேசனையும், அவரின் மனைவியையும் அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அதன்பின்னர், வெளிப்படையாகவே தம்பிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முருகேசன். 

இத்தொகுதியில் முழுமையாக மானாவாரி விவசாயப் பகுதிகள் என்பதால் விவசாயிகளிடம், ``தி.மு.க ஆட்சிக்கு வந்துட்டா வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செஞ்சுடுவாங்க. 100 நாள் வேலை, 150 நாளாக அதிகமாகும்” என இந்த இரண்டு வாக்குறுதிகளை ஒவ்வொரு கூட்டங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர் தி.மு.க-வினர். இது, கிராமப்பகுதியில் டீக்கடைகளிலும், திண்ணைகளிலும் மக்கள் பேசும் அளவுக்கு சென்று சேர்த்தது. ஸ்டாலினின் திண்ணைப் பிரசாரத்தை விடவும், கனிமொழியின் கனிவான வாக்கு சேகரிப்பு பெண்கள் மத்தியில் நன்கு எடுபட்டது.

பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அ.ம.மு.க வேட்பாளரான சுந்தர்ராஜ், 29,228 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க-வின் வெற்றியைப் பாதித்ததில், அ.ம.மு.க-வுக்குப் பெரும் பங்கு உண்டு. அ.தி.மு.க-வின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட அ.ம.மு.க, தி.மு.க-வின் வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இத்தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, 19 சுற்றுகளில் 17 சுற்றுகளில் தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்தது. 2 சுற்றுகளில் மட்டுமே அ.தி.மு.க முன்னிலை வகித்தது. அ.தி.மு.க-வின் பிரசாரத்தைவிட  தி.மு.க, அ.ம.மு.க-வின் பிரசாரமும், பிரமாண்டமும் குறைவுதான் என்பது இரு கட்சியினருக்குமே தெரியும்.

மக்கள் நம்பும்படியான வாக்குறுதிகளும், வாக்கு கேட்ட விதமும்தான் தி.மு.கவை இத்தொகுதியில் வெற்றி பெறச் செய்துள்ளது என்கிறார்கள் தி.மு.க-வினர். கடந்த 1989-ல் அ.தி.மு.க ஜெ.அணி, ஜா.அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது, அதேபோல, அ.தி.மு.க, அ.ம.மு.க என பிரிந்துள்ள நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்று  கால் ஊன்றியுள்ளது தி.மு.க. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலும் தி.மு.க வெற்றி பெற்றாலும், தி.மு.க நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த விளாத்திகுளம் தொகுதியில் தோல்வியடைந்ததை நினைத்து வருத்தப்படுகிறார்கள் தி.மு.க-வினர். இதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க