எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கிராமத்திலும் தி.மு.க தான் லீடிங்... இப்படி ஆகிப்போச்சே! | dmk get leading vote in cm edappadi's own village

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (24/05/2019)

கடைசி தொடர்பு:20:05 (24/05/2019)

எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கிராமத்திலும் தி.மு.க தான் லீடிங்... இப்படி ஆகிப்போச்சே!

நாடாளுமன்ற தொகுதி

சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமல்ல, சொந்த சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்ல, தன்னுடைய சொந்த கிராமமான எடப்பாடி சிலுவம்பாளையம் பஞ்சாயத்தில்கூட அ.தி.மு.க அதிக வாக்குகள் பெற முடியாமல் மண்ணைக் கவ்வியிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெறும் தலைகுனிவாக மாறியுள்ளது.

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி. இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனின் வெற்றி தோல்வி என்பது எடப்பாடி பழனிசாமியின் கெளரவப் பிரச்னை. நிச்சயம் சரவணனை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார் என்று உள்ளூர் அ.தி.மு.க-வினர் கூறி வந்தார்கள்.  

முதல்வர் எடப்பாடி

அதைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் வீடு வீடாகவும், தெருத் தெருவாகவும் நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார். ஆனால், சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமல்ல, சொந்த சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்ல தன்னுடைய சொந்த கிராமமான எடப்பாடி சிலுவம்பாளையம் பஞ்சாயத்தில்கூட அ.தி.மு.க அதிக வாக்குகள் பெற முடியாமல் மண்ணைக் கவ்வியிருப்பது எடப்பாடிக்கு பெறும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று (23.5.2019) சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. வாக்குகள் 6 சட்டமன்றத் தொகுதி வாரியாக 26 சுற்றுகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி போன்ற சட்டமன்றத் தொகுதிகளைக் காட்டிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பார்த்திபன் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க வேட்பாளர் சரவணனைவிட தி.மு.க வேட்பாளர் பார்த்திபன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த சேலம் மக்களவைத் தொகுதியில் 1,46,926 வாக்குகளும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த சட்டமன்றத் தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 8,756 ஓட்டுகளும், எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கிராமமான சிலுவம்பாளையம் பஞ்சாயத்தில் 188 வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளார். இது அ.தி.மு.க-வினரைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

எடப்பாடி

இதுபற்றி அ.தி.மு.க-வினரிடம் கேட்டதற்கு, ``இதுபற்றி பேசும் மனநிலையில் தற்போது இல்லை. முதல்வர் சேலம் வந்த பிறகே இதுபற்றி ஆராயப்படும்'' என்றார்கள்.