`மதுரை மக்கள் தவறு செய்துவிட்டார்கள்' - கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகச் சீறும் ராஜன் செல்லப்பா! | rajan chellappa speaks about lok sabha election result

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (24/05/2019)

கடைசி தொடர்பு:20:51 (24/05/2019)

`மதுரை மக்கள் தவறு செய்துவிட்டார்கள்' - கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகச் சீறும் ராஜன் செல்லப்பா!

கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மதுரை மக்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யனின் தந்தையும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 

ராஜன் செல்லப்பா

மதுரை நாடாளுமன்றம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வி அடைந்துள்ள நிலையில் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அ.தி.மு.க-வுக்குத் தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளன. ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்கும் அதற்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடரும். ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனச் சொன்னார். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. வெற்றி பெற்றுள்ள எம்.பி-க்களால் மக்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தோல்வி குறித்து அ.தி.மு.க கவலை கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி என்ன தவறு செய்தது எனத் தெரியவில்லை.

மதுரை மக்களவைத் தொகுதியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும். சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். அவரால்  நாடாளுமன்றத்தில் பேச மட்டுமே முடியும், திட்டங்களை அ.தி.மு.க மட்டுமே கொண்டு வர முடியும். மக்களுக்காகக் கொண்டு வரக்கூடிய திட்டங்களை வெங்கடேசன் தடுக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தவறு செய்துள்ளார்கள். மதுரையில் தொழில் வளம் குறைந்தற்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம். தி.மு.க பெற்றுள்ள வெற்றி ஒரு மாயை. உண்மையான வெற்றி அ.தி.மு.க-வுக்கு மட்டுமே. அ.தி.மு.க-வுக்குள் சில நேரங்களில் சலசலப்பு நடப்பது வாடிக்கையானதுதான். இத்தேர்தல் தினகரனுக்கு முடிவு கட்டும் வகையில் அமைந்துள்ளது. இனியாவது தினகரன் வசம் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் அ.தி.மு.க-வுக்குத் திரும்ப வேண்டும். 

தினகரனை அ.தி.மு.க-வில் இணைப்பது பற்றி தலைமைதான் முடிவு செய்யும். தினகரன் தி.மு.க-வின் வெற்றிக்கு உதவியுள்ளார். ஆண்டிபட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகள், தினகரன் நினைத்தது நடக்கவில்லை. அ.தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னை வரும்போது ஈ.பி.எஸ் -ஓ.பி.எஸ் ராஜதந்திரத்தை கையாளுவார்கள். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தேர்தலில் பல தடைகளைத் தாண்டி தேர்தலில் போட்டியிட்டோம். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி குறையவில்லை. மக்களின் மனநிலை ஒரே நாளில் மாறக்கூடும். தமிழக வாழ்வாதார பிரச்னைகளில் நாடாளுமன்றத்தில் தி.மு.க என்ன செய்யப்போகிறது எனப் பார்ப்போம். சு.வெங்கடேசன் மதுரையின் மாறுபட்ட கலாசாரத்தைக் கொண்டு வந்தால் அதை மக்களே எதிர்ப்பார்கள்" எனக் கூறினார். முன்னதாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ராஜ் சத்யனும் முனியாண்டியும் நன்றி தெரிவித்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க