`பிரதமர் வேட்பாளர் பிரசாரம் கைகொடுத்தது' - வெற்றிக்குறித்து மாணிக்கம் தாகூர்! | declared prime minister candidate ragulgandhi winning to tamilnadu: manickamtagore

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/05/2019)

கடைசி தொடர்பு:06:00 (25/05/2019)

`பிரதமர் வேட்பாளர் பிரசாரம் கைகொடுத்தது' - வெற்றிக்குறித்து மாணிக்கம் தாகூர்!

``பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்தது தமிழ்நாட்டில் எங்கள் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது'' என விருதுநகர் எம்.பி-யாக தேர்வாகியுள்ள மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் 10,584 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 10,75,926 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி 3,16,329 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழித்தேவன் 53,040 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் 1,07,615 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 17,292 வாக்குகள் பதிவாகின.

மாணிக்கம் தாகூர்

இறுதியாக தே.மு.தி.க வேட்பாளரைவிட 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டுக்குப் பின் விருதுநகரிலிருந்து மீண்டும் இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ்

வெற்றி குறித்து மாணிக்கம் தாகூர் கூறும்போது, ``ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழ்நாட்டில் நாங்கள் முன்னெடுத்த பிரசாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவது போன்ற பிரசாரங்கள் எங்களுக்குப் பெரிய அளவில் கைகொடுத்தன. விருதுநகரில் என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு நன்றி. விருதுநகர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரலாகவும் மக்களவையில் ஒலிப்பேன். மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசுடன் போராடியாவது மக்களுக்கான தேவைகளை பெற்றுத் தருவோம்" எனத் தெரிவித்தார்.