`30 ஆண்டுகளுக்குப் பிறகு உதய சூரியன் சின்னம்' - ஈரோட்டில் கணேசமூர்த்தி வென்ற பின்னணி! | mdmk candidate ganesha moorthy won after 30 years by dmk symbol

வெளியிடப்பட்ட நேரம்: 22:28 (24/05/2019)

கடைசி தொடர்பு:22:28 (24/05/2019)

`30 ஆண்டுகளுக்குப் பிறகு உதய சூரியன் சின்னம்' - ஈரோட்டில் கணேசமூர்த்தி வென்ற பின்னணி!

கணேசமூர்த்தி

ஈரோடு மக்களவைத் தொகுதியில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றிருக்கிறார்.

தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஆரம்பக்காலத்தில் வகித்து வந்த கணேசமூர்த்தி, 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பிறகு தி.மு.க-வுடனான பிரச்னையில் வைகோ வெளியேற, அவருடன் கணேசமூர்த்தியும் தி.மு.க-விலிருந்து வெளியேறினார். அதன்பிறகு ம.தி.மு.க சார்பில் 1998-ல் பழநி மக்களவைத் தொகுதியிலும், 2009-ல் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானார்.
 
இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க இணைய, ஒரே ஒரு தொகுதியான ஈரோடு மட்டுமே ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் கணேசமூர்த்தியை களமிறக்கி, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார். `தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது’ என தி.மு.க தரப்பு கொடுத்த அழுத்தத்தால், கடைசியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார்.

கணேசமூர்த்தி

ம.தி.மு.க-வுக்கு கிடைத்த ஒரே சீட்டை ஜெயிக்க வேண்டும் என வைகோவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் கணேசமூர்த்தி தோற்கக் கூடாது என தி.மு.க-வினரும் கடுமையாக வேலை செய்தனர். அதேநேரத்தில் அறிமுகமில்லாத வேட்பாளர், நிர்வாகிகளுக்கிடையேயான உள்ளடி வேலை போன்ற காரணங்களால் அ.தி.மு.க வேட்பாளரான ஜி.மணிமாறன் திணறியது கணேசமூர்த்திக்கு தெம்பை ஊட்டியது. கணேசமூர்த்திக்கு வெற்றி உறுதி என தேர்தலுக்குப் பின்னர் பலராலும் பேசப்பட்டது.

அதைப்போலவே, வாக்கு எண்ணிக்கை நாளில் ஆரம்பத்தில் இருந்தே ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தியின் வெற்றி ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருந்தது. பத்து சுற்றுகளிலேயே அ.தி.மு.க வேட்பாளரைவிட ஒரு லட்சம் வாக்குகள் லீடிங்கில் கணேசமூர்த்தி இருந்தார். மொத்தம் பதிவான 6,930 தபால் வாக்குகளில் 5,790 வாக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட, அதில் கணேசமூர்த்தி மட்டும் 4,662 வாக்குகளைப் பெற்றார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட மணிமாறன் 3,52,973 வாக்குகளைப் பெற, கணேசமூர்த்தியோ 5,63,591 வாக்குகள் பெற்று 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றார்.

1989-ம் ஆண்டு தி.மு.க சார்பில் உதயசூரியன் சின்னத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன கணேசமூர்த்தி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஈரோடு எம்.பி-யாகியிருக்கிறார்.