காங்கிரஸுக்கு கிடைத்தது மட்டும் எங்களுக்குக் கிடைத்திருந்தால்...! - தி.மு.க வேட்பாளரை கலங்க வைத்த 456 வாக்குகள் | dmk defeated by admk by 456 votes in sattur

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (25/05/2019)

கடைசி தொடர்பு:06:30 (25/05/2019)

காங்கிரஸுக்கு கிடைத்தது மட்டும் எங்களுக்குக் கிடைத்திருந்தால்...! - தி.மு.க வேட்பாளரை கலங்க வைத்த 456 வாக்குகள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு சாத்தூரில் 83,075 வாக்குகளும், சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியான தி.மு.க வேட்பாளருக்கு 76,521 வாக்குகளும் விழுந்தன. மாணிக்கம் தாகூருக்கு விழுந்த வாக்குகள் அப்படியே சீனிவாசனுக்கு விழுந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வருத்தமாக இருப்பதாக தி.மு.க-வினர் தெரிவித்தனர். 

திமுக சீனிவாசன்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட வி.சீனிவாசன் அ.தி.மு.க வேட்பாளரான எஸ்.ஜி.சுப்ரமணியனிடம் 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் மீண்டும் சீனிவாசன் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் போட்டியிட்டார். எஸ்.ஜி.சுப்ரமணியன் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டார். 1278 தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 1,82,908 வாக்குகள் பதிவாகியிருந்தன. 97 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன.

மாணிக்கம் தாகூர்

பரபரப்பாக நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதியாக ராஜவர்மன் 76,977 வாக்குகளும் பெற்றனர். 76,521 வாக்குகள் பெற்ற சீனிவாசன் 456 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார். ஆனால், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு சாத்தூர் தொகுதியில் 83,075 வாக்குகள் கிடைத்தன. மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள் அப்படியே இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளருக்கு விழுந்திருந்தால் சாத்தூர் இடைத்தேர்தலில் அவரும் மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், அந்த வாக்குகள் ஏன் எங்களுக்கு விழவில்லை என தி.மு.க-வினர் வருத்தத்தோடு கேள்வி எழுப்பினர்.