"திருப்திகரமாக இல்லை" - மார்ட்டின் குழும ஊழியர் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய நீதிபதி உத்தரவு | Judge orders to conduct re postmortem of Martin groups employee

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (25/05/2019)

கடைசி தொடர்பு:07:00 (25/05/2019)

"திருப்திகரமாக இல்லை" - மார்ட்டின் குழும ஊழியர் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய நீதிபதி உத்தரவு

கோவை தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், மறு உடற்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனிச்சாமி

கோவை தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, மார்ட்டின் குழும காசாளர் பழனிச்சாமி காரமடை அருகே வெள்ளியங்காடு குட்டையில் கடந்த 3-ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பழனிச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறிய நிலையில், கடந்த 5 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில்,  பழனிச்சாமி உடலில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரின் மரணத்துக்குக் காரணமான வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் மார்ட்டின் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பழனிச்சாமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, பழனிச்சாமி மகன் ரோஹின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்  கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பழனிச்சாமி உடலில் காயங்கள் இருப்பதாகவும், அதை முறையாக உடற்கூராய்வு செய்யவில்லை என்பதால், மறு உடற்கூராய்வு நடத்த வேண்டுமென்று பழனிச்சாமி குடும்பத்தினர் நீதிபதி ராமதாஸிடம் மனுத்தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக, நீதிபதி ராமதாஸ் தரப்பில் பல்வேறு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது.

பழனிச்சாமி

"ஏற்கெனவே நடத்தப்பட்ட உடற்கூராய்வு அறிக்கை முழுமையாகவும், திருப்திகரமான வகையிலும் இல்லை. எனவே, வருகின்ற 28-ம் தேதி மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். மேலும், ஏற்கெனவே உடற்கூராய்வு செய்த மருத்துவ குழு அல்லாத இரண்டுக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரை கொண்டு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் மனுதாரர் வைத்த கோரிக்கையின்படி, சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக மருத்துவர் சம்பத்குமார் என்பவரை சேர்க்க வேண்டும். உடற்கூராய்வு செய்யும் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும்" என்று நீதிபதி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.