‘4 எம்.பிக்களுக்கு ஒரு கோடி, மற்றவர்களுக்கு 10 கோடி!’ - அழைப்பு விடுக்கும் ‘கள்’ நல்லசாமி! | kal nallasamy offers for mp's and mla's...

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (25/05/2019)

கடைசி தொடர்பு:08:20 (25/05/2019)

‘4 எம்.பிக்களுக்கு ஒரு கோடி, மற்றவர்களுக்கு 10 கோடி!’ - அழைப்பு விடுக்கும் ‘கள்’ நல்லசாமி!

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்னும் பதவியேற்கவேயில்லை. அதற்குள்ளாகவே, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு 10 கோடி அளவிலான ஆஃபர் ஒன்றைக் கொடுத்து அழைப்பு விடுத்திருக்கிறார் ‘கள்’ நல்லசாமி.

‘கள்’ நல்லசாமி

கள்ளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என நீண்ட காலமாக குரலெழுப்பி, போராடி வருபவர் ‘கள்’ நல்லசாமி. இவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், ``தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கள்ளுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி பலகட்டப் போராட்டத்தை நடத்தியும் எந்தவித பலனுமில்லை. 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடத்தும், வாக்கு கேட்டு வந்த தலைவர்களிடத்தும் ‘கள்’ ஒரு போதைப் பொருளல்ல என்பது குறித்து இயக்கத்துடன் வாதாட வருமாறும், 10 கோடி பரிசையும் அறிவித்தோம். ஆனால், எவரும் வரவில்லை. இப்போது 38 எம்.பிக்களும், 22 எம்.எல்.ஏகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றியை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களிடம் வந்து வாதிட்டு வெற்று பெற்றுப் பாருங்கள்’ என அதிரடி கிளப்பியிருக்கிறார்.

இதுகுறித்து கள் நல்லசாமியிடம் பேசினோம். “கள் ஒரு உணவுப்பொருள் தான் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்த அரசியல்வாதிகள், அரசியலமைப்புச் சட்டத்தினை மீறும் வகையில் இன்றுவரை கள்ளுக்கு தடை விதித்திருக்கின்றனர். கள் ஒரு போதைப்பொள் தான் என்னிடம் விவாதம் செய்து நிரூபித்தால் 10 கோடி பரிசு தருகிறேன் என அறிவித்தும் எந்த அரசியல்வாதியும் வரவில்லை. என்கிட்ட போட்டி போட்டு ஜெயிக்க முடியாதவங்க நாடாளுமன்றம், சட்டமன்றம் போய் என்ன செய்யப் போறாங்க. கள் ஒரு போதைப்பொருள் என நிரூபிக்க முடியாது என்ற காரணத்திற்காகத் தான் எவரும் என்னிடம் போட்டியிட வர மறுக்கிறார்கள். எனவே, தோல்வியை ஒற்றுக்கொண்டு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்” என்றார்.

எம்.பி

தொடர்ந்து பேசியவர், ‘நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், பவானிசாகர் அணையின் மூலமாகப் பாசன வசதி பெறுகிறார்கள். தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய அணையான பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகம், 1958 லிருந்து முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால், இதைப்பற்றி யாரும் பெரிதாக கவலைப்படுவதாகவும், இந்தப் பிரச்னையையும் சரி செய்வதாகவும் பிரசாரத்தின் போது சொல்லவில்லை. பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதிகளில் வெற்றிபெற்ற எம்.பிக்களுக்குத் தெரியாதா. அவர்கள் அங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை என வாதிட்டால், 1 கோடி பரிசு தரத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

பயங்கரமான ஆஃபராக இருக்கே!...