``நீலகிரியில் அதிகரிக்கும் ஷஹீன் பால்கன் பறவை.. ஆனால்....?” - பறவையியலாளர்களின் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் | Shaheen falcone number increasing in nilagiri pleatue

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/05/2019)

கடைசி தொடர்பு:09:20 (25/05/2019)

``நீலகிரியில் அதிகரிக்கும் ஷஹீன் பால்கன் பறவை.. ஆனால்....?” - பறவையியலாளர்களின் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்

மணிக்கு 340 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் மிக வேக பறவையான ஷஹீன் பால்கன் பறவை எண்ணிக்கை நீலகிரியில் அதிகரித்திருப்பதாக பறவையியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

ஷஹீன் பால்கன்.

பல்லுயிர் பெருக்க சூழலில் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் மிக முக்கிய உயிர்க்கோளமாக விளங்கி வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளின் கடைசிப் புகலிடமாக நீலகிரி உள்ளது. ஆசிய யானை, புலி, மட்டுமல்லாது எண்ணற்ற பறவை இனங்கள், ஊர்வன எனப் பல அரியவகை உயிரினங்கள் நாள்தோறும் பல்வேறு காரணங்களால் அச்சுறுதலுக்குள்ளாகின்றன. காடழிப்பு, பணப்பயிர் சாகுபடி, அந்நிய களைத் தாவரங்கள், மக்கள் தொகை பெருக்கம் எனப் பல இடர்களைச் சந்திக்கின்றன.


இப்படிப்பட்ட  சூழலில்  உலகில்  அழிந்துவரும்  பறவை இனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள  பெர்கரின் பால்கன் குடும்பத்தைச் சேர்ந்த ஷஹீன் பால்கன் இனப்பெருக்க எண்ணிக்கை நீலகிரி காடுகளில் அதிகரித்து இருப்பது பறவையியலாளர்கள் மத்தியில் ஒரு புறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம்  அவற்றின் வாழிடமும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக  அவற்றைப்  பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராடி வருகின்றனர் .

ஷஹீன் பால்கன் பறவைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு புகைப்படங்கள் மூலம் பதிவு செய்த சந்தான ராமன் கூறுகையில், “பாகிஸ்தானின் பாரம்பர்ய தேசியப் பறவையாக உள்ளது. உலகின் மிக வேகமாகப் பார்க்க கூடிய திறன் கொண்ட இந்த ஷஹீன் பால்கன் பறவை அழியும் பட்டியலில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம் செஞ்சிக்கோட்டையில் ஒரு முறையும், பழவேற்காட்டில் ஒரு முறையும் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளது. இதனை விண்டர் விசிட்டர் என்பார்கள். குளிர் காலத்தில் இடம் பெயரும் பறவைகள் எனக் கூறுகின்றனர். ஆனால் அதற்கான ஆய்வு முடிவுகள் தெளிவாக இல்லை. நீலகிரியைப் பொறுத்தவரை இந்த ஷஹீன் பால்கன் பறவை இனத்தின் எண்ணிக்கை நல்ல முறையில் உள்ளது. 2013  முதல் 2017  வரை நீலகிரியில் மேற்கொண்ட ஆய்வில் 8 கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

25 முதல் 30 வரை இந்த பறவைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதமான வெப்பநிலை உள்ள  பள்ளத்தாக்கு பகுதிகள், மலைச்சரிவான பகுதிகள் பாறைகள் நிறைந்த பகுதிகளில் கூடுகள் அமைத்து வாழ்கின்றன. துரதிஷ்டவசமாக இப்போது இந்த பகுதிகள் நீலகிரி மாவட்டத்தில்  மக்கள் வாழும்  பகுதிகளிலும், சுற்றுலா தளங்களுக்கு அருகிலும் தனியார் தோட்டங்களிலும் வருவாய் நிலங்களிலும் அமைந்துள்ளது. அழிவின் விளிம்புக்கே சென்று மெல்ல மீண்டுவரும் இந்த அரியவகை பறவையை பாதுகாக்க  வனத்துறை மட்டுமல்லாது அணைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது உடனடி தேவை“ என்றார் .