``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..!'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை | BJP will rise in Tamilnadu says Tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (25/05/2019)

கடைசி தொடர்பு:14:34 (25/05/2019)

``தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..!'' - முழக்கத்தை கைவிடாத தமிழிசை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் தோல்வி முகம்தான். ஆனாலும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மோடி

நடந்துமுடிந்த தேர்தலில் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்று பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் மட்டும்தான் பா.ஜ.க வெல்லவில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று ஐந்து தொகுதிகளில் களமிறங்கியது பா.ஜ.க. ஆனால், அதில் ஒன்றில்கூட வெல்லவில்லை. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது. நாங்கள் எதையும் தடுக்கவில்லை. ஆனால், நீரற்ற குட்டையில் எவ்வாறு தாமரை மலரும்?'' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

தமிழிசை

இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் நிதின் கட்கரி செய்தியாளர்களை சந்தித்தபோது, ''கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தென்னிந்தியாவின் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இதற்கு  60,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்க, இதை வைத்தே காங்கிரஸ் தலைவருக்குப் பதிலளித்திருக்கிறார் தமிழிசை.

தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு 60 ஆண்டுக்காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ்தான் காரணம் என்று பட்டியலிட்டு, நிதின் கட்கரியின் அறிவிப்பு குறித்தும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தமிழிசை கூறுகையில், ''நேற்று இரவு என் கண்களில் கண்ணீர். தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. ஆங்கில தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவில் எங்கள் அமைச்சரின் பேட்டியைக் கேட்டதும் ஒரு எம்.பி-யைக்கூட தரமறுத்துவிட்ட தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதுதான் இந்த ஆட்சியின் முன்னுரிமை என்று பேசியத்தைக்கேட்டதும் ஆனந்தக்கண்ணீர்'' என்று தெரிவித்திருந்தார்.

                                                         ட்வீட்

அதோடு, ''தாமரை மலர தண்ணீர் வேண்டுமே! கே.எஸ்.அழகிரி? தமிழகத்தைத் தண்ணீரில்லாமல் போனதற்கு இந்த நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ்தான் காரணம். எனவேதான் எங்கள் அமைச்சர் நிதின்கட்கரி இந்தமுறை முதல்பணியாகத் தமிழகத்துக்குத் தண்ணீர் தர காவிரி கோதாவரி இணைப்பு என அறிவித்துள்ளார். எனவே, இங்கே தாமரை மலர்ந்தே தீரும்'' என்று தெரிவித்துள்ளார்.