1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி | 61st annual Fruit Show 2held in Coonoor

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (25/05/2019)

கடைசி தொடர்பு:15:25 (25/05/2019)

1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி

1.5 டன் பழங்களில் வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டு வண்டி எனக் கோலாகலமாகத் தொடங்கியது  61வது குன்னூர் பழக் கண்காட்சி.  இங்கு பழங்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பழ வகைகள் இடம் பெற்றுள்ளன.

பழங்களால் ஆன வண்ணத்து பூச்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 1.5 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்களால் ஆன மயில்

மேலும் பழங்களாலான மயில், பழ மேடை, மாட்டு வண்டியில் கூடைகளுடன் பழம் விற்கும் தம்பதிகள், பழங்களாலான நுழைவு வாயில் எனப் பல சிறப்பு அலங்காரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பழங்களால்  செய்யப்பட்ட அலங்காரம்

இது தவிர தோட்டக்கலை அரங்கில் 21 வகையான மாம்பழம், 13 வகையான வாழை, 4 வகையான பலா, பிளம், பீச், ரம்பூட்டான், துரியன், ஆஸ்திரேலியா ஃபைன் ஆப்பிள், மங்குஸ்தான் என இறுநூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாகப் பழங்களை குண்டூசிகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மாதிரி வடிவங்களை உருவாக்குவது வழக்கம் இதனால் அதிகளவு பழங்கள் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட தோட்டக்கலைத் துறையினர் இந்த ஆண்டு பழக் கண்காட்சியில் முதல் முறையாகப் பழங்கள் சேதமடையாமல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், காட்சிக்கு பயன்படுத்தும் பழங்களை கண்காட்சி நிறைவடைந்ததும் ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பழக் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை அரங்குகள், தனியார் பழ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பழங்கள் மேடை

நீலகிரி தோட்டக்கலை துறையின், நீலகிரியில் விளையும் பழங்களான ஊசிப்பழம், தவிட்டுப்பழம், விக்கி, பிளம்ஸ், பீச், பெர்ரி உட்பட அரிய வகை பழங்கள், சமவெளி பகுதிகளின் பழங்கள் கண்காட்சி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.