`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை!’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா | karur youngster celebrate birthday function in tamil method

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (25/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (25/05/2019)

`கேக் இல்லை; மெழுகுவத்தி இல்லை!’ - தமிழர் மரபுப்படி கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா

கரூரைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுக்கு, தர்ப்பூசணிப் பழத்தை வெட்டவைத்து, திருக்குறள்களை ஓதி தமிழ்முறைப்படி நடைபெற்ற தமிழ்மரபிலான பிறந்தநாள் விழா, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. 
          

    தமிழ்முறைப்படி நடந்த பிறந்தநாள் விழா

கரூர் மாவட்டத்தில் உள்ள ராமாகவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரஜினி-சாரதி தம்பதி. இவர்களின் மகன் கிருத்திவின். ரஜினி சமீபத்தில் மறைந்துவிட, கொள்ளுத்தாத்தா வையாபுரி பராமரிப்பில் இருந்து வருகிறான் கிருத்திவின். இந்நிலையில், கிருத்திவினுக்கு 8 வயது முடிந்து, ஒன்பது வயது தொடங்க, தனது கொள்ளுப்பேரனுக்கு தமிழ்முறைபடி பிறந்தநாள் கொண்டாடி, அசத்தி இருக்கிறார் வையாபுரி. வழக்கமாக, பிறந்தநாள் விழாக்களை நாம் மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவத்திகளை அணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால், இங்கே கேக் வெட்டுவதற்குப் பதிலாக, தர்ப்பூசணி பழத்தை வெட்டி, அதை எல்லோருக்கும் வழங்கினார்கள். அதேபோல், மெழுகுவத்தியை வைத்து ஊதி அணைக்காமல், இரண்டு குத்துவிளக்குகளை வைத்து, தீபம் ஏற்றினார்கள்.


 தமிழ்முறைப்படி நடந்த பிறந்தநாள் விழா.

அதன் பிறகு, அங்கே வந்திருந்த தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், திருக்குறளில் கடவுள் சம்பந்தமாகத் தொடங்கும் வரிகளைப் படித்து, அதோடு போற்றி, போற்றி எந்த வாழ்த்து வார்த்தையையும் சேர்த்து, கிருத்திவினை வாழ்த்தினார்கள். கூடவே, தமிழ்முறைபடி பிறந்தநாள் விழா ஏன் கொண்டாட வேண்டும், கேக் மற்றும் அதன் மேல் இருக்கும் க்ரீமால் ஏற்படும் வயிற்றுப் உபாதைகள் என்னென்ன என்று சகல விஷயங்களையும் பேசினர். அதன் பிறகு, அனைவரும் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக, வையாபுரியிடம் பேசினோம்.


 வையாபுரி

"நான் தமிழ் ஆர்வம் உடையவன். ஆனால், கிருத்திவினுக்கு கடந்த எட்டு வருடங்களாக மேற்கத்திய பாணியில் கேக் வெட்டிதான் பிறந்தநாள் விழா கொண்டாடினோம். சமீபத்தில், கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை முன்பு, அவர் படைத்த 1330 திருக்குறள்களையும் ஓதி, உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தொடங்கினோம். அந்த அமைப்பின் மாநிலத் தலைவராக இயக்குநர் வி.சேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நான் அந்த அமைப்பின் கரூர் மாவட்டத் துணைத்தலைவராக உள்ளேன். இந்த அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் தமிழ் ஆர்வலர்கள் இல்லங்களில் நடைபெறுகிற திருமணம், வளைகாப்பு, பூப்புனிதநீராட்டு விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் தமிழ்முறைப்படி நடத்துவது என்று முடிவு செய்தோம்.

மரக்கன்றுகள் வழங்கியபோது...

அந்த விழாக்களில் திருக்குறள்களை ஓதி, குத்துவிளக்கை ஏற்றி நடத்துவது என்று உறுதிமொழி எடுத்துக்கிட்டோம். இந்த நேரத்தில்தான் என் கொள்ளுப்பேரனுக்குச் சரியாக ஒன்பதாவது பிறந்தாள் வந்தது. அதனால், அவனுக்கு தமிழ்முறைப்படி திருக்குறள் ஓதி பிறந்தநாள் விழா கொண்டாடினோம். மெழுகுவத்தியை அணைப்பது தவறு, மாறாக இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சிப் பொங்க குத்துவிளக்கை ஏத்த வேண்டும் என்று சொல்லி, குத்துவிளக்குகளை ஏத்தினோம்.

கேக்குக்குப் பதிலாக தர்ப்பூசணிப் பழத்தை வெட்ட வைத்தோம். அதோடு, என் கொள்ளுப்பேரனை விட்டு ஒரு மரக்கன்றை நட வைத்தோம். கூடவே, விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேர்களுக்கும் கொள்ளுப்பேரன் கையால் மரக்கன்றுகள் வழங்கினோம். ஆனால், விழாவுக்கு வந்த பலரும், 'இது என்ன கோட்டித்தனமா இருக்கு'னு கமென்ட் பண்ணினாங்க. அவங்களையும் மெல்ல மெல்ல தமிழ்முறைப்படியிலான விழாக்களை நடத்த ஆயப்படுத்துவோம். உலகமே திருக்குறளின் மேன்மையைக் கொண்டாடுகிறது. ஆனால், நான் இன்னமும் நமது குடும்ப விழாக்களை ஆங்கில, சமஸ்கிருத மோகத்தில் நடத்துவது சரியல்ல. அனைத்து இல்லங்களிலும் அந்த மாற்றத்தை விதைப்பதுதான் எங்களின் தலையாய பணி" என்றார்.