``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது?” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்! | people demonstration for water near virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/05/2019)

கடைசி தொடர்பு:17:15 (25/05/2019)

``எத்தனை நாள்கள்தான் தண்ணீரின்றி தவிப்பது?” - விருதுநகர் அருகே போராட்டத்தில் குதித்த மக்கள்!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. பெரும்பாலான இடங்களில் 10 அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீருக்காக மக்கள் குடங்களோடு தெருத்தெருவாய் அலைந்து திரிகிறார்கள். விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ராமன் தெரு, அனுமன் நகர் போன்ற பகுதிகளில் ராஜீவ்காந்தி தேசிய குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

போராட்டம்

இதுகுறித்து அதிகாரிகள் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 50 பேர் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, ``எங்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லை. எத்தனை நாளைக்குத்தான் பணம் கொடுத்து குடிநீர் வாங்க முடியும். வருமானத்தில் பெரும்பகுதியைத் தண்ணீருக்கே செலவழிக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளிடம் கூறினாலும் எங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாகக் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்" எனத் தெரிவித்தனர்.