கர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..! | women leg removed for poor service of government hospital at virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (25/05/2019)

கடைசி தொடர்பு:12:56 (26/05/2019)

கர்ப்பப்பை கட்டி ஆப்ரேஷனுக்கு சென்ற பெண் காலை இழந்த பரிதாபம் - விருதுநகர் அரசு மருத்துவர்களின் அலட்சியம்..!

விருதுநகர் ஆமத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி மகாலிங்கம், அவரது மனைவி பாண்டீஸ்வரி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாண்டீஸ்வரிக்கு வயிற்று வலி காரணமாக கடந்த 30.04.2019 அன்று விருதுநகர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய கர்ப்பப்பையில் கட்டியிருப்பதாகக் கூறி மறுநாள் 1.5.2019 அன்று அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியுள்ளனர். சிகிச்சை முடிந்த நிலையில் உடனடியாக வலது காலில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். அது ஒன்றும் இல்லை சரியாகிவிடும் என்று அலட்சியமாகப் பதில் கூறியுள்ளனர். முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். ஒவ்வொரு நாளும் வலி கூடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு சில நாட்களில் காலில் உணர்வு இல்லாமல் மறுத்துப் போன நிலையில் காலை துளிகூட அசைக்க முடியாத அளவிற்குக் கருப்பு நிறமாக மாறிவிட்டது. 

பாண்டீஸ்வரி

7 நாட்கள் கடந்த நிலையில் தாமதமாக கடந்த 9.5.2019 அன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு சிகிச்சை மருத்துவரை வரவழைத்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர் அங்கிருந்து மருத்துவர்களைப் பார்த்து ஏன் இவ்வளவு மோசமான நிலை ஏற்படும்வரை என்ன செய்துகொண்டிருந்தீர்கள், ஆப்ரேஷன் முடிந்த அன்றே மதுரைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்திருந்திருக்கலாம் அல்லது என்னை அவசரமாக உடனே அழைத்திருந்திருக்கலாம் என்று கடிந்துள்ளார். உடனடியாக பாண்டீஸ்வரியை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்துள்ளனர். சிறப்பு சிகிச்சை வார்டில் வைத்து சிகிச்சை அளித்தும் பயன் அளிக்கவில்லை. வலது காலை எடுத்தே ஆகவேண்டும் என்று கைவிரித்துவிட்டனர். செய்வதறியாத பாண்டீஸ்வரியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி, வேதனையில் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.  

பாண்டிஸ்வரியின் கணவர் மகாலிங்கத்திடம் என்ன நடந்தது என்று விசாரித்தோம் சார் நான் மூட்டை தூக்கி அன்றாட கூலி வேலை செய்துவருகிறேன். வருமானம் போதாததால் என் மனைவி பாண்டீஸ்வரி நாலு வீட்டில பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளரத்துவந்தோம். இந்நிலையில் என் மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் காலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருந்தார். சாதாரண வயிற்று வலிக்குச் சிகிச்சைக்காக வந்தோம் இன்று காலை எடுக்கும்படி செய்துவிட்டனர். வைத்தியத்திற்குக் காசு இல்லாமல்தான் அரசு மருத்துவமனை நம்பி வந்தோம். 

மகாலிங்கம்

வலியால் மனைவி துடிக்கிறாள் என்று கதறியும் அலட்சியமாக இருந்தனர். என் மனைவியை ஆப்ரேஷன் முடிந்த அன்றோ அல்லது மறுநாளோ மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனுப்பியிருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது. 21 நாட்கள் ஆகிவிட்டது மருத்துவமனையில்தான் இருக்கிறோம். திடீரென்று வந்து என் மனைவியின் வலது காலை எடுக்கவேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று  சர்வ சாதாரணமாகக் கூறுகின்றனர். இதை நான் சும்மா விடமாட்டேன். என் மனைவிக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்று முடித்துக்கொண்டார். இந்த வழக்கு விசாரணை நாளை மதுரை உயர் நீதிமன்றத்தில் வரவுள்ளது.