`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்!’ - சு.வெங்கடேசன் | madurai mp S.venkatesan talk about politics

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (26/05/2019)

கடைசி தொடர்பு:12:21 (26/05/2019)

`ஆளும் கட்சியுடன் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்கு பணியாற்ற தயார்!’ - சு.வெங்கடேசன்

'இது மன்னராட்சி காலம் அல்ல, மக்களாட்சி. தி.மு.க கூட்டணி  எம்.பிக்கள் 37 பேரும் இந்தியாவின் முகமாக செயல்படுவார்கள்" என்று  சு.வெங்கடேசன் இன்று தெரிவித்தார்.

சு.வெங்கடேசன்

'கம்யூனிஸ்ட் எம்.பி.யை தேர்வு செய்ததால் மதுரைக்கு எந்த திட்டமும் வராது, மக்கள் தவறு செய்து விட்டார்கள்' என்று, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா நேற்று கூறியிருந்தார். இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன், "நாடாளுமன்றத்தில் துலாக்கோல் போல் நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை அறிந்தவர்கள் அதனைத்தான் செய்வார்கள்.

இது மன்னராட்சி காலம் அல்ல. மக்களாட்சியின் காலம்.  எனவே, தி.மு.கவின்  கூட்டணி 37 எம்.பி.க்களும் இந்தியாவின் முகமாக செயல்படுவார்கள்." என்றவரிடம், " வெறும் நிழற்குடை மட்டும்தான் இவர்களால் அமைக்க முடியும் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே'' என்று கேட்டதற்கு,  "நிழற்குடையும் அவசியமாகத்தான் இருக்கிறது. பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட்டதால் அங்கு   நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் நிழல் இல்லாமல் வெயிலில் நிற்கிறார்கள்." என்றார்.

தொடர்ந்து "தொழில் வளர்ச்சியை பொறுத்தமட்டில் தமிழகத்தில் பல்வேறு ஆலைகள் செயல்படுவதற்கு கம்யூனிஸ்டுகள்தான் காரணம். முன்னாள் எம்.பி.தோழர் மோகனின் செயல்பாட்டால் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள்  கிடைத்தன. அந்த  நம்பிக்கையில்தான் மக்கள் இப்போது என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.  தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மதுரையின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனைக்குழு அமைத்து திட்டங்கள்   நிறைவேற்றப்படும்.மதுரையிலுள்ள ஆளும் கட்சியைச் சார்ந்த இரண்டு அமைச்சர்கள், மற்றுமுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள் அனைவரோடும் இணைந்து மதுரையின் வளர்ச்சிக்காக கைகோர்த்து செயல்பட தயாராக உள்ளேன் " என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க