`தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்!' அ.தி.மு.க-வின் 2 சாய்ஸ் யார் யார்? | edappadi palanisamy discussed about cabinet participation

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:15 (27/05/2019)

`தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்!' அ.தி.மு.க-வின் 2 சாய்ஸ் யார் யார்?

டெல்லிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்றிருந்தனர். அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி....

பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்ற அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும், பெருவாரியான இடங்களில் ஜெயித்து மத்தியில் ஆட்சியில் மீண்டும் அமர்கிறது பி.ஜே.பி. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கூட்டணி கட்சி தலைவர்களைப் பிரதமர் மோடி டெல்லி அழைத்திருந்தார். டெல்லிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்றிருந்தனர். அப்போது, மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே உறுப்பினராக இருக்கிறார். 

எடப்பாடி

அதே சமயம், ராஜ்யசபாவில் அ.தி.மு.க-வுக்கு 13 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நால்வருக்கு அடுத்த மாதம் பதவிக்காலம் முடிகிறது. ஆக, அ.தி.மு.க-வின் பலம் ஒன்பதாகக் குறைகிறது. இதில், மீண்டும் மூவர் ஜெயிக்கலாம். எனவே, ராஜ்யசபாவில் 12 பேர் அ.தி.மு.க உறுப்பினர்கள் இருப்பார்கள். பல்வேறு சிக்கலான விவகாரங்களில் முடிவெடுக்கும் நிலை வரும்போது, இவர்களின் ஆதரவு எப்போதுமே பி.ஜே.பி-க்குத் தேவை. இதனால் ஜெயலலிதா காலத்தில் பின்பற்றப்பட்ட பி.ஜே.பி அமைச்சரவையில் இடம்பெறாமல் வெளியில் இருந்து பிரச்னைகள் அடிப்படையில் ஆதரவு என்கிற நிலைப்பாட்டை தற்போது பின்பற்றுவதா? அல்லது, மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதா? என்பது குறித்து பேச்சு நடந்திருக்கிறது. தமிழகத்தில் பி.ஜே.பி மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கூட்டு வைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம். எனவே, ஜெயலலிதா ஃபார்முலாவை பின்பற்றுவோம். அப்போதுதான், தமிழகத்தில் இனிவரும் உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்கமுடியும்" என்று பெரும்பாலான கட்சிப் பிரமுகர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். 

வைத்திலிங்கம்

ஆனால், எடப்பாடி ஆதரவு பிரமுகர்கள், `` கடந்த முறை நாடாளுமன்றத்தில் 37 எம்.பி-க்கள். ராஜ்யசபாவில் 13 எம்.பி-க்கள் என்று 50 இருந்தும் டெல்லியில் தமிழகத்துக்கான எந்தத் திட்டத்தையும் பெரிய அளவில் கொண்டுவரவில்லை. அதுவே, மத்திய அமைச்சரவையில் யாராவது இடம்பெற்றிருந்தால் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். இந்த முறை அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. தி.மு.க கூட்டணியின் பலம் 39. ஏற்கெனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் சிலரும் இந்தமுறை நாடாளுமன்றத்துக்கு வருகிறார்கள். அவர்களைச் சமாளிக்க மத்திய அமைச்சர் யாராவது நம் கட்சியில் இருந்தால்தான் முடியும். எனவே, மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதுதான் நல்லது " என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். இதையே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள... அப்படியானால், யார் யாரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் சிபாரிசு செய்யலாம்? என்கிற பேச்சு துவங்கியிருக்கிறது. 

ரவீந்திரநாத்

நாடாளுமன்றத்துக்கு ஒருவர். ராஜ்யசபாவுக்கு ஒருவர்.. என்று இரண்டு பேர்களை முன்னிறுத்துவோம் என்று எடப்பாடி தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி அ.தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் பேசியபோது, ``ஒ.பி.எஸ். மகனுக்கு அமைச்சர் பதவி கேட்போம். ராஜ்யசபாவில் இருக்கும் எம்.பி-களில் சசிகலாவை எதிர்த்து அவரது தஞ்சை மண்டலத்தில் அரசியல் நடத்திவரும் வைத்திலிங்கம் பெயரைச் சொல்லியிருக்கிறோம். எங்கள் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர், கழக செய்தி தொடர்பாளர், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்... என்று கட்சியின் சீனியரான வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்" என்கிறார். 

எடப்பாடி

இந்த இருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால், பி.ஜே.பி. தரப்பில் விசாரித்தபோது, `` முதல்கட்டமாகப் பதவியேற்கும் அமைச்சரவையில் அ.தி.மு.க-வுக்கு சான்ஸ் தரலாமா? என்று பேசிவருகிறார்கள். இரண்டாம் கட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது பரிசீலிக்கலாம் என்று மூத்த தலைவர்கள் சொல்லிவருகிறார்கள். அடுத்த ஓரிரு நாள்களில் பி.ஜே.பி-யின் முடிவு தெரிந்துவிடும்" என்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க