`டிக் டாக் வீடியோவில் அவதூறு கிளப்புகின்றனர்!' - மீன் சுருட்டியில் பா.ம.க-வினர் சாலைமறியல் | PMK cadres staged protest in meensurutti

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:18 (27/05/2019)

`டிக் டாக் வீடியோவில் அவதூறு கிளப்புகின்றனர்!' - மீன் சுருட்டியில் பா.ம.க-வினர் சாலைமறியல்

டிக் டாக் வீடியோ மூலம் ஒருதரப்பினர் தங்கள் கட்சி குறித்தும் தலைமை குறித்தும் அவதூறு பரப்பி வருவதாகக் கூறி பா.ம.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு வீடியோ வெளியிட்ட இளைஞரைக் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்  

                                   பா.ம.கவினர் போராட்டம்

சமூக வலைதளங்களில் ஒன்றான டிக் டாக்கில் ஒரு சமுதாயத்தினரை இழிவாகப் பேசி மிரட்டும் வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த முத்துசேர்வமடம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில் பா.ம.க-வினரையும் அன்புமணி ராமதாஸையும், கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன் சுருட்டி காவல்நிலையம் முன்புள்ள சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். 

                                             பா.ம.கவினர் போராட்டம்
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த டி.எஸ்.பி கென்னடி தலைமையிலான போலீஸார், உடனே அங்கு சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேசி, டிக் டாக்கில் பதிவு செய்தவரைக் கைது செய்வோம் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பின்னர் பா.ம.க-வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீன்சுருட்டி காவல் நிலையம் முன்பு பா.ம.க-வினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சமூக வலைதளங்களில் சாதிக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் எச்சரித்துள்ளார்.