ஒரே வழித்தடத்தில் 28 ஆண்டுகள் பணி! - அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கிராம மக்கள் மரியாதை | Cuddalore Village people felicitated government bus driver

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:35 (27/05/2019)

ஒரே வழித்தடத்தில் 28 ஆண்டுகள் பணி! - அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கிராம மக்கள் மரியாதை

விருத்தாசலம் பகுதியில் அரசுப் பேருந்தில் ஒரே வழித்தடத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டிரைவர் ஓய்வு பெறுவதை அறிந்த மக்கள் அவரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, பரிசுப் பொருள்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.

 டிரைவர்

விருத்தாசலம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் அரசுப் பேருந்து டிரைவராக 32 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இதில் 28 வருடங்கள் விருத்தாசலத்தில் இருந்து தே.பவழங்குடி செல்லும் அரசுப் பேருந்தில் ரூட் நம்பர் 6 என்ற வழித்தடத்தில் தொடர்ந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது பணிகாலத்தில் கிராம மக்களிடம் அன்புடன் பழகி நன்மதிப்பைப் பெற்றுள்ளார். இந்த வழித்தடம் குண்டும், குழியுமாகப் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் சாலை மிக மோசமாக இருந்தபோது மற்ற டிரைவர்கள் பணியாற்ற ஒதுங்கிய நிலையில், இன்முகத்துடன் மக்களுக்கு உதவ வேண்டும் என பணியாற்றியவர். தனது பணிக் காலத்தில் பேருந்தைச் சரியான நேரத்தில் இயக்கி, அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி இன்முகத்துடன் பயணிகளை அழைத்துச் சென்ற டிரைவர் ராமசாமி ஓய்வு பெறுவதை தே.பவழங்குடி கிராம மக்கள் அறிந்தனர். இதையடுத்து, அவர்கள் ஒன்றுகூடி அவரை  மனதாரப் பாராட்டி பொன்னாடை போர்த்தி,
பரிசுப் பொருள்கள் கொடுத்து மகிழ்ந்தனர். பயணிகளிடம் சிடு சிடுவென வெறுப்பைக் காட்டும் அரசுப் பேருந்து டிரைவர், 
நடத்துநர்களிடையே தனது பணிக்காலத்தில் கிராம மக்களின் அன்பைப் பெற்ற ராமசாமி பராட்டுக்குரியவரே.