`கண் முன்னாடியே நாய்க்குட்டிகளைக் கொன்னுட்டாங்க!' - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுடன் போலீஸில் புகார் | Kumbakonam man files police complaint against 2 over killing dogs

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (27/05/2019)

`கண் முன்னாடியே நாய்க்குட்டிகளைக் கொன்னுட்டாங்க!' - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுடன் போலீஸில் புகார்

கும்பகோணத்தில் இரண்டு  நாய்குட்டிகளை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் என் கண் முன்னே அடித்துக்கொன்றுவிட்டனர். நாய்க் குட்டிகளின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து அதன் ரிப்போர்டை வாங்கிக் கொண்டு நாய் குட்டிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண் கலங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாய்க்குட்டிகள்

கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் வசித்து வருபவர் கணேசமூர்த்தி. இவர் நாய் ஒன்றை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய்  சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் மகிழ்ச்சியடைந்த கணேசமூர்த்தி நண்பர்கள் கேட்டதால் இரண்டு குட்டிகளை வளர்ப்பதற்காக அவர்களிடம் கொடுத்துவிட்டார். மீதமுள்ள 3 குட்டிகள் மற்றும் தாய் நாய் இருந்து வந்தது. இதை தினமும் நல்ல முறையில்  கவனித்து வந்திருக்கிறார். அதோடு பால் மற்றும் உணவும் நாய்க்கு கொடுத்த பிறகே அவர் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு  இரவு நேரத்தில் கணேசமூர்த்தி, நாய்க்கும், குட்டிகளுக்கு உணவு கொடுக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் ராமநாதன் மற்றும் ராம்குமார் இருவரும், இரு  நாய்க்குட்டிகளை  கட்டையால் அடித்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த  கணேசமூர்த்தி, இருவரிடமும், `நாய்க்குட்டிகளை ஏன் அடிக்கிறீர்கள்?. வாயில்லா ஜீவனை இப்படி அடிக்கீறீங்களே, உங்களுக்கு இரக்கமே இல்லையா?' என கேட்டுள்ளார். அதற்கு இருவரும் நாங்கள் அப்படிதான் அடிப்போம், எனக் கூறியதோடு தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, காரில் ஏறிச் சென்றுவிட்டனர்.

நாய்க்குட்டிகள்

பின்னர் கணேசமூர்த்தி தரையில் சரிந்து விழுந்து கிடந்த நாய்க்குட்டிகளை தூக்கிப் பார்த்தபோது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  இறந்துவிட்டன. உடனே கண் கலங்கி பரிதவித்து துடித்திருக்கிறார். பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு இறந்த இரண்டு நாய்க் குட்டிகளை போஸ்மார்ட்டம் செய்வதற்கு தூக்கிச் சென்றார். நாய்க்குட்டியை போஸ்ட்மார்ட்டம் செய்த கால்நடை மருத்துவர் கணேஷ்பாபு, தலை மற்றும் வயிற்றில் பலத்த காயமடைந்ததால் இறந்துவிட்டது என கூறி சான்றிதழ் வழங்கினார்.

அந்தச் சான்றிதழை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டிகளைத் தாக்கியவர்கள் மீது புகார் கொடுப்பதற்கு கணேசமூர்த்தி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பாசமாக வளர்த்த நாய்க்குட்டிகளை இருவர் என் கண் முன்னே அடித்துக்கொன்று விட்டனர் என பணியில் இருந்த போலீஸாரிடம் கலங்கியபடி  புகார் அளித்துள்ளார். பின்னர் ராமநாதன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க