`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி! - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள் | 8,285 votes casted on NOTA in pudukottai district

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:06 (27/05/2019)

`புதுக்கோட்டை தொகுதியை மீட்போம்' பிரசாரம் எதிரொலி! - நோட்டாவுக்கு விழுந்த 8,285 வாக்குகள்

புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்க, தொகுதி மீட்புக்குழு சார்பில் நோட்டாவுக்கு வாக்களிக்கக்கோரி பிரசாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து நோட்டாவில் 8,285 வாக்குகள் பதிவாகி உள்ளன.

தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த புதுக்கோட்டைக்குக் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2004 வரையிலும் தனி நாடாளுமன்றத் தொகுதி இருந்தது. 2009-ல் தொகுதி மறு சீரமைப்புக்காக புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை நீக்கிவிட்டனர். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளையும், திருச்சி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள் இணைத்துவிட்டனர்.

தொகுதி நீக்கியபோது, வணிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களையும் பிரசாரங்களையும் முன்னெடுத்தனர். அப்போதைய நோட்டாவான 49 ஓ-க்கு 13,500 வாக்குகள் பதிவாயின. 
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது நோட்டாவுக்கு 10,500 வாக்குகள் வரையிலும் பதிவாயின. இந்த நிலையில் தான், இழந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்கும் வகையில், நாடாளுமன்றத் தொகுதி மீட்புக்குழு நோட்டாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த தேர்தலை விடவும் இந்த முறை நோட்டாவுக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், தற்போது, 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி, திருமயம் தொகுதிகளில் 2,664 வாக்குகளும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் சேர்த்து 3,380 வாக்குகளும், கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலிமலையில் 1,108 வாக்குகளும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் 1,133 வாக்குகள் எனப் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து 8,285 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகியுள்ளன. 

கடந்த 2014 நாடாளுமன்றத் தொகுதியில் கிடைத்த வாக்குகளை விடவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்குப் பதிவான வாக்குகள் சதவிகிதம் குறைந்துள்ளது. இருந்த போதிலும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்பதற்காக, தொடர்ந்து பல்வேறு அறவழி போராட்டங்களையும், பிரசாரங்களையும் முன்னெடுக்க உள்ளதாகப் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மீட்புக்குழு தெரிவிக்கின்றனர்.