`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க!' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள் | Take action against those who cut the trees, Seruvaviduthi village people files complaint

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:25 (27/05/2019)

`பறவைகளின் வசிப்பிடமா இருந்த மரங்களை வெட்டிட்டாங்க!' - காவல்நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்

பேராவூரணி அருகே குளத்தில் பறவைகள் வசித்து வந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள்

திருச்சிற்றம்பலம் அருகே குளத்தில், பறவைகள் தங்குமிடமாக இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு செருவாவிடுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு கிராமத்தில் அமைந்துள்ளது சங்கிலி குளம். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் அந்த ஊராட்சிக்கே நீராதாரமாக இருந்து வருகிறது. தூர்வாராமல் கிடந்த சங்கிலி குளத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து தூர்வாரியதோடு தொடர்ந்து பராமரித்தும் வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல், செருவாவிடுதி கிராமத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனைத் தொடர்ந்து அங்கு வசித்த பறவைகள் தங்குவதற்கு வசிப்பிடமின்றி தவித்தன. பின்னர், சங்கிலி குளத்தின் கரைகளில் நாட்டுக் கருவேல மரங்கள் இருந்தன. குளத்தில் தண்ணீரும் இருந்ததால், வசிப்பிடம் தேடி அலைந்த பறவைகள் அங்கு தங்க ஆரம்பித்தன. `காலை இரைதேடிச் செல்லும் பறவைகள் மாலை நேரத்தில் திரும்பும். அப்போது குளக்கரையில் உள்ள மரத்தில் அமர்ந்துகொண்டு ஆனந்தமாக சத்தமிடும். அதைக்கேட்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும்' என ஊர் மக்கள்  தெரிவிக்கின்றனர்.

வெட்டப்பட்ட மரங்கள்

இந்தநிலையில், கஜா புயலினால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடங்களில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டுவதற்காக பேராவூரணி பொதுப்பணித்துறை அதிகாரிகளால் ஏலம் விடப்பட்டது. செருவாவிடுதியில் கிடந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஏலம் எடுத்தவரின் ஆட்கள் செருவாவிடுதி பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். அப்போது சங்கிலி குளத்தில் உயிரோடு நின்றுகொண்டிருந்த பறவைகள் தங்கக் கூடிய நாட்டு கருவேல மரங்களையும் வெட்டிவிட்டனர். `காலை பறவைகள்  இரைதேடச் செல்லும்போது இருந்த மரம், மாலை திரும்புவதற்குள் வெட்டப்பட்டன. பறவைகள் வந்ததும் மரத்தை காணாமல் கூச்சலிட்டு தவித்ததை பார்க்கவே முடியவில்லை' என்றார் ஊரைச் சேர்ந்த ஒருவர்.

இதுகுறித்து  தகவல் அறிந்த செருவாவிடுதி கிராம மக்கள் தஞ்சை கலெக்டர், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், ஏலம் விடாத  நல்ல மரங்களையும்  வெட்டியிருப்பது  தெரியவந்தது. இதையடுத்து, மரங்களை அனுமதியின்றி வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் சார்பில்  திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மரங்கள்தானே என நினைக்காமல் பறவைகளின் வீடு இடிக்கப்பட்டதாக  நினைத்து மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் கிராம மக்களை அருகில் இருந்த கிராம மக்கள் பாராட்டினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க