`தொடரும் பவர் கட் தண்டனையா?!' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள் | Tanjore people suffers over Continuous power cut

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/05/2019)

கடைசி தொடர்பு:08:50 (27/05/2019)

`தொடரும் பவர் கட் தண்டனையா?!' - சந்தேகிக்கும் தஞ்சை மக்கள்

கடந்த மே 23-ம் தேதி இரவு தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து தஞ்சாவூரில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் செயலாக இருக்குமோ என தஞ்சை மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

இருளில் தவிக்கும் தஞ்சை மக்கள்

வழக்கமாக கோடைக்காலங்களில் அடிக்கடி மின் வெட்டு நிகழ்வதுண்டு. ஆனால், இந்த ஆண்டு தஞ்சாவூரில் மின் வெட்டு என்பது அரிதாகவே இருந்தது. இதனால், தஞ்சை மக்கள் மிகவும் நிம்மதியாக இருந்து வந்தார்கள். ஆனால், இந்த நிம்மதி மே 23-ம் தேதி இரவு வரைதான் நீடித்தது. அன்று இரவு 11 மணியிலிருந்து தஞ்சையின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இருளில் தவிக்கும் தஞ்சை மக்கள்

பழைய பேருந்து நிலையம், கீழ வாசல், சீனிவாசபுரம், மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிபாளையம், தொம்பன் குடிசை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்கிறது. ``தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ததால் இங்குள்ள அ.தி.மு.க பிரமுகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் அதிகாரம் மிக்க பிரமுகரின் கோட்டையாக தஞ்சாவூர் இருந்து வந்தது. இவங்களோட மறைமுக உத்தரவுனாலதான் அடிக்கடி கரன்ட் நடக்குதோனு சந்தேகப்படுறோம். `ஆளுங்கட்சிக்கு ஓட்டு போடலைனா இதுதான் நிலைமைனு'' காட்டுறதுக்காகதான் பழி வாங்குறாங்களோனு சந்தேகமாக இருக்கு. ஒரு தடவை அல்லது ரெண்டு தடவை கரன்ட் கட்னா பொறுத்துக்கலாம். இந்த இரண்டு நாள்களா ஏகப்பட்ட தடவை பவர் கட். கரன்ட் போயிட்டு திரும்பவும் வர ரொம்ப நேரமாகுது'' என தஞ்சாவூர் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இக்குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டோம். ``மின்சார உற்பத்தி குறைவாக இருக்குறதுனாலதான் கரன்ட் கட் பண்றோம். வேற எதுவும் காரணம் இல்லை'' என்றார். தமிழ்நாடு மின்மிகு மாநிலமாக திகழ்வதாக அ.தி.மு.க அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் மின்வாரிய அதிகாரியின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மக்கள். தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பின்னர், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போதும் கரன்ட் கட் ஆனது. அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்குமோ என தி.மு.க-வினர் அப்போதே சந்தேகம் கிளப்பினர்.