``சபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம்?” - ஆய்வு செய்கிறது மாநில கணக்குக் குழு | Gold missing in Sabarimalai temple, investigation

வெளியிடப்பட்ட நேரம்: 07:18 (27/05/2019)

கடைசி தொடர்பு:07:18 (27/05/2019)

``சபரிமலையில் காணிக்கை தங்கம் மாயம்?” - ஆய்வு செய்கிறது மாநில கணக்குக் குழு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருள்களில் ஒருபகுதி மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கேரள மாநில கணக்குக் குழு தங்கம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையைத் திறந்து ஆய்வு செய்கிறது.

சபரிமலை


பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மகரவிளக்கு, மண்டலகால பூஜைகளின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் நடத்துகின்றனர். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குப் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பல பொருள்கள் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் ஆறாமுள கோயிலில் உள்ள தேவசம்போர்டு லாக்கரில் வைக்கப்படுகிறது. அஜிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் தலைமையில் அதிகாரிகள் லாக்கர் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனித்து வருகின்றனர். மூன்று அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்துதான் பாதுகாப்பு அறையைத் திறக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில், சபரிமலை கோயிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் குறைவாக உள்ளதாக விஜிலென்ஸுக்கு புகார் சென்றுள்ளது. விசாரணையில், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என்றும், துல்லிய கணக்குகள் இல்லை எனவும் தேவசம் விஜிலென்ஸ் கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மாநில கணக்குக் குழு தங்கம் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறந்து ஆய்வு செய்ய உள்ளது.

கடகம்பள்ளி சுரேந்திரன்


இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ``தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை பாதுகாக்கும் அதிகாரி பணி மாறிச்செல்லும்போது, புதிய அதிகாரியிடம் கணக்கு ஒப்படைக்கும்போது தவறு நடந்துள்ளது. தங்கம் குறைந்துள்ளதாக கூறுவது சரியல்ல" என்றார்.

இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரன் கூறுகையில், ``சபரிமலை கோயிலுக்கு காணிக்கையாகக் கிடைத்த தங்கம் குறைந்துள்ளதாக வந்துள்ள புகார் குறித்து தேவசம்போர்டு தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளேன். இதில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு அறைகள் நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படும்" என்றார்.

சபரிமலை கோயிலுக்கு காணிக்கை அளித்த தங்கம் மாயமானதாக எழுந்த புகார் கேரளத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.