நிரம்பி வழிந்த கழிவுநீர் தொட்டி; சுத்தம் செய்ய இறங்கிய பெண்ணுக்கு நடந்த சோகம்! | women died at thanjavur while cleaning the drainage

வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (27/05/2019)

கடைசி தொடர்பு:09:39 (27/05/2019)

நிரம்பி வழிந்த கழிவுநீர் தொட்டி; சுத்தம் செய்ய இறங்கிய பெண்ணுக்கு நடந்த சோகம்!

தஞ்சாவூரில் பாதாளச் சாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் தொட்டியை சுத்தம் செய்த பெண் விஷ வாயு தாக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மல்லிகா

தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோயில் தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் மனைவி மல்லிகா (60). தைக்கால் தெருவில் அடிக்கடி பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பும் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடியது. இதனால் தாங்க முடியாத துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இந்த நிலையில், ராமலிங்கம் வீட்டுக்கு எதிரே சாலையில் போடப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடைக் குழாயிலிருந்து அவரது வீட்டுக்கு இணைக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடை குழாயில் கழிவுநீர் கசிந்து துர்நாற்றம் வீசி வந்தது. இதனால், இந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ராமலிங்கத்தின் மனைவி மல்லிகா சென்றார்.

அப்போது அவர் முகத்தில் துணி கட்டாமலும் மேலும் வேறு எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை இல்லாமலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் தொட்டியில் இருந்து திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. இதில் உடனே மல்லிகா மயங்கி விழுந்ததுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விஷ வாயு தாக்கி மல்லிகா இறந்த செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கழிவுநீர்

மேலும், மல்லிகாவின் மரணத்துக்கு அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியே காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம், ``இந்தப் பகுதியில் அடிக்கடி சாக்கடைக் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கொஞ்ச தூரத்திலேயே பாதாளச் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் ஸ்டேஷன் உள்ளது. இதனால் கழிவு நீர் வழிந்தோடும்போது துர்நாற்றம் தாங்க முடியாது. இப்போதும் அதுபோல்தான் துர்நாற்றத்தைத் தாங்க முடியாத மல்லிகா அவரே சுத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.  

எங்களை மனிதனாகப் பார்க்காமல் ஒரு புழுவைப்போல் மாநகராட்சி அதிகாரிகள் பார்க்கின்றனர். எத்தனை முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி நாமே சுத்தம் செய்ய வேண்டியதுதான் எனக் கூறி சுத்தம் செய்தபோதுதான் இப்படி நடந்துள்ளது. இதனால் மல்லிகாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
விஷ வாயு தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரிகளோ, ``தொட்டியை சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதனால் இறந்தார் எனத் தெரிய வரும்'' என்று கூறுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க