5 நாள்கள்தான்; மிஸ் பண்ணிடாதீங்க! - இயற்கை எழில் கொஞ்சும் குன்னூர்- ரன்னிமேடு மலை ரயில் | Nilgiri Ooty Special mountain train Coonoor to Rannimedu

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (27/05/2019)

கடைசி தொடர்பு:09:55 (27/05/2019)

5 நாள்கள்தான்; மிஸ் பண்ணிடாதீங்க! - இயற்கை எழில் கொஞ்சும் குன்னூர்- ரன்னிமேடு மலை ரயில்

நீரோடை, பள்ளத்தாக்குகள், வனப்பகுதிகள் நிறைந்த ரன்னிமேடு பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை சிறப்பு சுற்றுலா மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

\மலை ரயில்

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்துக்கு இந்த ஆண்டு கோடை சீஸனை முன்னிட்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். நீலகிரி வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மலை ரயிலில் பயணிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஒரு மலைரயிலும் குன்னுார் ஊட்டி இடையே நான்கு மலைரயிலும் இயக்கப்படுகின்றன. 

ரயில்

தற்‌போது கோடை சீஸன் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில் ஒன்று மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நீரோடைகள், பள்ளத்தாக்குகள், வனப்பகுதிகள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் குன்னுார் மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் உள்ள ரன்னிமேடு பகுதிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதைப் பரிசீலித்த தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் குன்னுார் ரன்னிமேடு இடையே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்துள்ளது. இந்தச் சிறப்பு மலை ரயில் இயக்கம் இன்று தொடங்கி 31-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை 5 நாள்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, முதல் வகுப்புப் பெட்டியில் 56 இருக்கைகளும் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் 30 இருக்கைகளும் உள்ளன. முதல் வகுப்பு கட்டணமாக ஒரு பயணிக்கு 450 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு ஒரு பயணிக்கு 320 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணிக்கு குன்னுாரிலிருந்து புறப்படும் ரயில் ரன்னிமேட்டை 12 மணிக்கு அடைகிறது. பின்னர் 1 மணிக்கு ரன்னிமேடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு 1.30 மணியளவில் குன்னுாரை அடைகிறது.