`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்?’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்! | Who will be the rajyasabha candidate from ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (27/05/2019)

கடைசி தொடர்பு:11:15 (27/05/2019)

`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்?’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்!

எடப்பாடி பழனிசாமி

`கேபினட் கலாட்டா’ தான் அ.தி.மு.க-வின் தற்போதைய ஹாட் டாப்பிக். அ.தி.மு.க நினைத்தபடி மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்துவிட்டது. 30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்கிறார். அவரது அமைச்சரவையில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு என்ற விவாதங்கள் மேலோங்கியுள்ளன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தேனியில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் அக்கட்சியிலிருந்து `சிங்கிள் எம்.பி’யாக நாடாளுமன்றம் செல்ல இருக்கிறார். தன் மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

ரவீந்திரநாத்

மத்திய அரசு நெருக்கத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்ஸின் இந்த முடிவுக்கு டெல்லியிலிருந்து இரண்டு தினங்களில் கிரீன்  சிக்னல் கிடைத்துவிடும் என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில். ``மத்திய பா.ஜ.க அரசுடன் ஓ.பி.எஸ் நல்ல உறவுடன் இருக்கிறார். தன் மகனை எப்படியும் ஜெயிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், வாரணாசி சென்றபோதே, `தன் மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும்’ என்ற தன் விருப்பத்தைக் கூறியிருக்கிறார். தான் நினைத்தபடியே அ.தி.மு.க-வின் ஒரே மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றிருக்கிறார் ரவீந்திரநாத்குமார். கட்சியிலிருந்து சீனியர்கள் யாரும் வெற்றி பெறாததை தனக்கான ப்ளஸ்ஸாக கருதுகிறார். காரணம், அப்படி வெற்றி பெற்றிருந்தால் கட்சியில் கோஷ்டி சண்டை வெடித்திருக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன் மகனுக்கு, பொன்னார் வகித்து வந்த கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார். இதற்கு ஒப்புதல் தெரிவிக்க பா.ஜ.க இன்னொரு பிளானை கையில் வைத்துள்ளது” என்று விவரித்தவர்கள்..

எடப்பாடி பழனிசாமி

`தமிழகத்தில் அக்கட்சிக்கு 2014-ம் ஆண்டு வெற்றி மூலம் பொன்னார் எம்.பியாக இருந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் வாஷ்அவுட் ஆகிவிட்டது. தமிழகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததால், தமிழகத்திலிருந்து தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓ.கே என்றால் மத்திய கேபினேட்டில் ரவிந்திரநாத்குமார் இடம்பெறுவார்” என்கின்றனர். மேலும், ``அ.தி.மு.க-விலிருந்து 3 பேர் மாநிலங்களைவைக்குச் செல்ல உள்ளனர். 7+1 என்ற ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பியை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர் பா.ம.க-வினர்.

மக்களவையில் அவர்கள் தேவை ஏற்படவில்லை என்றாலும், இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சோளிங்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் வெற்றியில் பா.ம.க-வின் வாக்குவங்கியும் கலந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.  அதனால் பா.ம.க-வுக்கு ராஜ்யசபா கொடுக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல மற்றொரு ராஜ்யசபாவை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கும் முடிவுக்கும் வந்துள்ளது அ.தி.மு.க. மீதமுள்ள ஒரு தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. மைத்ரேயன் மற்றும் தம்பிதுரை இருவரில் யார் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இரண்டொரு நாளில் முடிவு வரும்” என்கிறார்கள். 

தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ``கூட்டணியின் பேச்சுவார்த்தையின்போது முடிவானதன்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர்  வைகோ ராஜ்யசபா எம்.பியாக நாடாளுமன்றத்துக்குள் செல்வார். தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் தனக்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்று  கேட்டுவருகிறார்” என்கிறார்கள்.