`குறுக்க புகுந்து ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கீங்க!'- கேள்வியால் கடுகடுத்த திருநாவுக்கரசர் | Thirunavukkarasar loses temper during press meet in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (27/05/2019)

கடைசி தொடர்பு:13:14 (27/05/2019)

`குறுக்க புகுந்து ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கீங்க!'- கேள்வியால் கடுகடுத்த திருநாவுக்கரசர்

சென்னையில் இன்று செய்தியாளர்களின் கேள்வியால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி கடும் கோபம் அடைந்தார்.

திருநாவுக்கரசர்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஒப்பற்றத் தலைவராக திகழ்ந்துகொண்டிருக்கிற ராஜீவ் காந்தி வழியிலே தலைவர் ராகுல்காந்தி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும், தொடர வேண்டும். இது நாடு முழுவதும் இருக்கக்கூடிய காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். நாட்டு மக்களுடைய விருப்பமும் அதுதான். 

ஒரு தேர்தலில் ஏற்படக்கூடிய வெற்றியோ தோல்வியோ ஒரு தலைவருடைய செல்வாக்கையோ எதிர்காலத்தையோ கண்டிப்பாக நிர்ணயம் செய்யக்கூடியது அல்ல. இது தேர்தலில் ஏற்பட்டிருக்கிற சறுக்கலுக்கு, வெற்றி பெறாமல் போனதற்கு எப்படி ராகுல் காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியும். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிற தலைவர்கள், தொண்டர்கள் வரைக்கும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். அதற்கான அதிகாரத்தை செயற்குழுவும் அவருக்குக் கொடுத்திருக்கிறது. மற்றபடி அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சே கிடையாது.

அவருக்கு வயது இருக்கிறது. அவர் பிரதமர் ஆகணும்னா பத்து வருஷத்துக்கு முன்பு மன்மோகன் சிங் இருக்கும்போது ஆகியிருப்பார். அவர் தர தயாராகவே இருந்தார். வாழ்க்கையில் பிரதராக இருக்க வேண்டும் என்று லட்சியம் இருந்தால் அவர் ஏற்கெனவே பிரதமராகியிருக்கணும். அவருக்கு வயது இருக்கிறது. இந்த ஐந்து வருடம் `ஜஸ் லைக் தட்'டாக போயிடும். மன்மோகன் சிங் பத்து வருஷம் இருந்தார். மாற்றம் வந்தது. வாஜ்பாய் 1996-ல் ஜெயித்து பின்னர் நம்பிக்கையில்லாத தீர்மானத்துக்கு முன்பு விலகினார். பின்னர் 98, 99-ல் வந்தார். மூன்று தடவை பிரதமராக பொறுப்பேற்றார். பிறகு தோல்வியடைந்தார். அதன்பிறகு பி.ஜே.பி வந்திருக்கிறது. காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் ஜெயித்து வந்திருக்கிறது. இந்த ஐந்து வருடம் சர்வசாதாரணமாகப் போய்விடும். ராகுல்காந்தி அடுத்த பிரதமராகத்தான் வருவார். அவருக்கு நாங்கள் பக்கபலமாக, துணையாக நின்று இந்தக் கட்சியைப் பலப்படுத்த எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம்`` என்றார்.

நேரு சிலைக்கு மாலை அணிவித்த திருநாவுக்கரசர்

காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி, குடும்ப அரசியலை கடுமையா எதிர்த்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் களை எடுக்கிற நேரம் வந்துவிட்டதா? 

``நாங்கள் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை குறித்து பேசிக்கிட்டு இருக்கிறோம். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) இடையில் குறுக்க புகுந்து ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கீங்க. இது சாதாரண விஷயங்கள். காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து செயல்படும்.''