ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓ.பி.எஸ்!- எடப்பாடி சிக்னல் கொடுத்தது எப்படி?   | OPS seeks cabinet spot for his son Ravindranath kumar, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (27/05/2019)

கடைசி தொடர்பு:18:38 (27/05/2019)

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓ.பி.எஸ்!- எடப்பாடி சிக்னல் கொடுத்தது எப்படி?  

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தன்னுடைய மகனை மத்திய இணை அமைச்சராக்க வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடத்தில் காயை நகர்த்திவருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்.பியுமான ரவிந்திரநாத்குமார் கேபினட்டில் கட்டாயம் இடம் பிடிப்பார் என்று நம்புகின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் நரேந்திரமோடி. அதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடந்துவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்த அ.தி.மு.க.வுக்கு தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திநாத்குமார், வெற்றி பெற்றதால் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அ.தி.மு.க-வில் உயர்ந்துள்ளது. 

சில நாள்களுக்கு முன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாரை அழைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வரிடம் வாழ்த்து பெற்றபோதே, மகனுக்கு அமைச்சர் பதவி குறித்துப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்காக டெல்லிச் சென்ற முதல்வரும், துணை முதல்வரும் பா.ஜ.க. மேலிடத்தில் அதுதொடர்பாக பேசியுள்ளனர். அதற்கு, அமித் ஷாவும் நரேந்திர மோடியும் ஓகே சொன்னதாக ஓ.பன்னீர்செல்வம், தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுக்கு மட்டும் டெல்லியிலிருந்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி ஆகியோர் வரும் 29-ம் தேதி டெல்லிக்குச் செல்லவுள்ளனர். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துபெறும் ரவீந்திரநாத்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், ``தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்க்காத முடிவு அ.தி.மு.க-வுக்கு கிடைத்துள்ளது. மக்களின் முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. இந்தச் சோகத்திலும் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றது மட்டும் ஆறுதலான விஷயம். 

ரவீந்திரநாத்குமாரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் களமிறங்கினர். இதனால், மும்முனைப்போட்டி தொகுதியில் நிலவியது. அதை சமாளிக்கும் வகையில் தேர்தல் வியூகங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செல்வாக்கு வெளிப்படையாக தெரிந்துவிட்டது. ஆர்.கே.நகர் பார்முலா என எதுவும் எடுபடவில்லை. 

அதே நேரத்தில் தொகுதி முழுவதும் இரவு, பகல் பாராமல் அ.தி.மு.க-வினரும் கூட்டணிக் கட்சியினரும் பாடுபட்டனர். இதனால்தான் தேனி தொகுதியில் வெற்றி பெற முடிந்தது. தேனி தொகுதியின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வமும் ரவீந்திரநாத்குமாரும் உங்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது என்று உருக்கமாக கூறியுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமியால் அமைச்சராக உள்ள ரவீந்திரநாத்குமார்

தேனி தொகுதியில் அதிக ஓட்டுகளை வாங்கிக் கொடுத்த பூத் பொறுப்பாளர்கள் சிறப்பாக கவனிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல தமிழகத்திலிருந்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் டெல்லிக்குச் செல்லும் ஒரே எம்.பி. ரவீந்திரநாத்குமார் என்பதால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க. மேலிடத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்களும் ஓகே என்று சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வைத் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதுபோல ரவீந்திரநாத்குமாருக்கும் இணை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஓ.கே என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுவிட்டது. முதல் முறையாக எம்.பியான ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கவுள்ளதால் ஓ.பன்னீர்செல்வமும் அவரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், ``ஆரம்பத்தில் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் தேவையில்லாத கோஷ்டிப் பூசல் ஏற்படும் என்று கருதினோம். ஆனால், ராஜ்யசபா எம்.பி.யை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் விட்டுக்கொடுப்பதாகக் கூறியதால் பா.ஜ.க மேலிடத்தில் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கேட்டுள்ளார். பா.ஜ.க மேலிடமும் தமிழகத்துக்கு ஒரு இணை அமைச்சர் பதவி கொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டது. அதனால், ரவீந்திரநாத்குமார், இணை அமைச்சராகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் வகித்த மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அல்லது ரயில்வே துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்தத் துறை என்பது உறுதி செய்யப்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளை ராஜ்ய சபா எம்.பி-க்களாக்குவது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது" என்றனர். 

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, ``தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் ரவீந்திரநாத்குமாருக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்க ஆலோசனை நடந்துவருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை என்றாலும் வாக்குசதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தேர்தல் பணிகளில் சொதப்பிய அ.தி.மு.க-வினர் மீது கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்திருந்தோம். அப்போது தலைமையிலிருந்து பதவி ஏற்பு விழா வரை எந்த குற்றச்சாட்டுக்களையும் தெரிவிக்கவேண்டாம் என்று கூறியுள்ளனர். அதோடு தமிழகத்தில் பா.ஜ.க. வலுவடைய சிலவற்றை பொறுத்துக்கொள்ளதான் வேண்டும். அதனால் அமைதியாக இருங்கள் என்று எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகுதான் சில மாற்றங்களை கட்சியில் ஏற்படுத்த அமித் ஷா முடிவு செய்துள்ளார்" என்றனர். 

``கட்சியிலும் மத்தியிலும் தன்னுடைய செல்வாக்கை ஓ.பன்னீர்செல்வம் உயர்த்திகாட்டியிருக்கிறார். ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டிருப்பது கட்சியில் உள்ள சில மூத்த நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லையாம். அவர்கள் போர்க்கொடி தூக்கியதும் சம்பந்தப்பட்டவர்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் அழைத்துப் பேசி முடித்துள்ளார். அதன்பிறகு ரவீந்திரநாத்குமார், அமைச்சராகுவதற்கு அ.தி.மு.க-விலிருந்து பெரியளவில் எதிர்ப்பலைகள் கிளம்பவில்லை'' என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.