``வெயில்ல நிக்கிறியே.. தொப்பி போட்டுக்கலாம்ல!" சுயேச்சை வேட்பாளரின் அனுபவம் | Roshi Madhu talks about her first election experience

வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (29/05/2019)

கடைசி தொடர்பு:15:04 (29/05/2019)

``வெயில்ல நிக்கிறியே.. தொப்பி போட்டுக்கலாம்ல!" சுயேச்சை வேட்பாளரின் அனுபவம்

"தேர்தல் நேரத்தில் மட்டும் 61,000 துண்டறிக்கைகளை மக்கள்ட்ட விநியோகிச்சோம். அதை வாங்கினவங்க, படிச்சவங்க அதுல உள்ளதைப் பத்தி அக்கம் பக்கத்துல உள்ளவங்களோடு பேசியிருப்பாங்க. அதுதான் ரொம்ப முக்கியம். இந்த உரையாடலை வளர்த்தெடுக்கணும்."

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் இறுதி நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணி நடைபெற்றது. அதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். அந்தப் போராட்டத்தில் தன் மூன்றரை வயது மகளோடு கலந்துகொண்டவர் ரோசி மது. கடும் சிரமத்தோடு அங்கிருந்து தப்பி வந்தவர். அதைத் தொடர்ந்து இன்று வரை மக்கள் பிரச்னைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் தவறாமல் இடம்பிடிப்பவர். பொதுவுடைமை இயக்கத்தில் செயல்படுபவர். 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வந்ததும், தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராக இவர் போட்டியிட்டார். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பெரிய கட்சிகள் நேரிடையாக மோதிக்கொள்ளும் தொகுதியில் இவர் நிற்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. தேர்தல் முடிவில் 498 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போதே தோற்றுவிடுவோம் என்பது தெரிந்தும் எதற்காகப் போட்டியிட்டீர்கள் என ரோசியிடம் கேட்டோம். 

சுயேச்சை

``நல்ல கேள்விதான். தோற்றுவிடுவோம் என்பது தெரிஞ்சதுதானே! இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன், சில விஷயங்களைப் பேசிடலாமே! தேர்தல் தேதி அறிவிச்சதும், எங்கள் இயக்கம் சார்பாக யாராவது போட்டியிடணும்னு முடிவெடுத்தோம். அது நான்தான்னு தெரிஞ்சதும் எனக்கே ஆச்சர்யம்தான். சரி, நிற்போம் என்ற எண்ணத்தோடு வேட்பு மனு தாக்கல் செஞ்சேன். இதில் ஒவ்வொரு விஷயமும் எனக்குப் புதுசா இருந்தது. வெளியிலேருந்து தேர்தலைப் பார்க்கறதுக்கும், அதில் பங்கேற்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்னு புரிஞ்சுது. வேட்பு மனு ஏற்கப்பட்டதும், பிரசார வேலைகளை ஆரம்பிச்சோம். 

``எங்ககிட்ட வேன், மைக், கூட்டம் எல்லாம் எதுவுமில்லை. நண்பர்களோடு கையில் சின்னத்தை வரைஞ்ச அட்டையோடும், துண்டறிக்கையோடும் மக்களைச் சந்திச்சோம். வீடு வீடாகப் போனோம். மக்களை பார்த்துப் பேசறப்ப நிறைய நாம கத்துக்க முடியும். நான் கத்துகிட்டேன். எங்களோட துண்டறிக்கையில தென்சென்னைக்கான பிரச்னைகளையும் அதற்குத் தீர்வுகளை மட்டுமே குறிப்பிடல. தமிழ்நாட்டுக்கான, இந்தியாவுக்கான அடிப்படைச் சிக்கல்களையும் சொல்லியிருந்தோம். சிலர் அதைப் படிச்சிட்டு, இதெல்லாம் ஏன் இதுல போட்டிருக்கீங்கனு கேட்டாங்க.

ரோசிமது

எங்களோட நோக்கம், சமூகத்துக்கான பிரச்னைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. இப்ப மட்டுமல்ல, தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலையை மூடச் சொல்றதுக்கான காரணங்களை துண்டறிக்கையில அச்சடிச்சி, சென்னை மக்களிடம்  கொடுத்திருக்கேன். அந்தப் பகுதி பிரச்னைகளையும் இந்தப் பகுதி மக்கள் தெரிஞ்சிக்கணும் இல்லையா? அதைத்தான் இந்தத் தேர்தல் வழியாகச் செஞ்சோம். தேர்தல் நேரத்தில் மட்டும் 61,000 துண்டறிக்கைகளை மக்கள்ட்ட விநியோகிச்சோம். அதை வாங்கினவங்க, படிச்சவங்க அதுல உள்ளதைப் பத்தி அக்கம் பக்கத்துல உள்ளவங்களோடு பேசியிருப்பாங்க. அதுதான் ரொம்ப முக்கியம். இந்த உரையாடலை வளர்த்தெடுக்கணும்.  

ஆடம்பரம் இல்லாம எளிமையா பிரசாரம் செஞ்ச எங்களுக்கு, பொதுமக்களும் நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. `புதுசா நிறைய விஷயங்கள் சொல்றீங்க...' `எல்லாருமே இளைஞர்களா இருக்கீங்க' `எந்தக் கட்சியும் வேணாம்னு இருந்தோம்; ஆனா, உங்களுக்கு ஓட்டு போடுறோம்'னு பல குரல்கள் எங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு. ஒருநாள் மத்தியானம். நல்ல வெயில். நண்பர்களோட நின்னு பிரசாரம் பண்ணிட்டு இருந்தேன். அப்ப ஒரு அம்மா, என்னைக் கடந்துபோனவங்க, திரும்ப வந்து, `ஏம்மா இந்த வெயில்ல நின்னுட்டு இருக்க... ஒரு தொப்பியாவது போட்டுக்கலாம்ல'னு அக்கறையோட சொன்னது நெகிழ்ச்சியாயிடுச்சு. சொல்லிட்டு அந்த அம்மா போய்ட்டாங்க. விஐபிகளோட நின்னு போட்டோ எடுக்கறதைகூட அதிகம் விரும்ப மாட்டேன். ஆனா, ஓடிப்போய் அந்த அம்மாவோடு ஒரு போட்டோ எடுத்துகிட்டேன். இப்படியும் சில மனிதர்களைப் பார்க்க முடிஞ்சது இந்தத் தேர்தலாலதான். 

ரோசி மது

`தோத்துவிடுவோம்னு தெரிஞ்சும் ஏன் போட்டியிட்டீங்க'னு நீங்க கேட்ட கேள்விக்கு விடை சொல்லிட்டேனு நினைக்கிறேன். மொத்தத்துல இந்தத் தேர்தல்ல போட்டியிட்டதால அளவிடமுடியாத நம்பிக்கையை மக்கள் எனக்குக் கொடுத்திருக்காங்க. 498 ஓட்டுகள் எனக்குக் கிடைச்சிருக்கு. தெரிஞ்ச நண்பர்கள் அவர்களின் வீடுகள்னு 150 ஓட்டுகளைக் கழிச்சிட்டாக்கூட, 348 ஓட்டுகள் முகம் தெரியாத மனிதர்கள்கிட்டேயிருந்து வந்திருக்கு. எங்க துண்டறிக்கையில உள்ள விஷயங்கள் குறிப்பிட்ட மனிதர்களைப் போய் சேர்ந்திருக்கு." என்கிறார் புன்னகையுடன். 

ரோசி மதுவுடன் தேர்தல் பிரசாரத்தில் துணையா இருந்த பொதுவுடைமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சஜித், ``தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கு மாற்றாக வாக்களிக்க நினைப்பவர்களுக்காகவே தேர்தலில் போட்டியிட்டோம். நாட்டின் வளம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. எல்லோருக்கும் அவற்றில் பங்கு உண்டு எனும் பொதுவுடைமை கருத்தை எங்களால் முடிந்தளவு பரப்புரை செய்தோம்." என்றார். 


டிரெண்டிங் @ விகடன்