குடிநீர் வழங்கக்கோரி முற்றுகையிட்ட மக்கள்... செய்தியும், ஆட்சியாளர் விளக்கமும்! (Updated) | People staged protest in Nellai collector office over drinking water scarcity

வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (13/06/2019)

கடைசி தொடர்பு:19:57 (13/06/2019)

குடிநீர் வழங்கக்கோரி முற்றுகையிட்ட மக்கள்... செய்தியும், ஆட்சியாளர் விளக்கமும்! (Updated)

நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் கிராமத்துக்கு தாமிரபரணித் தண்ணீர் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், மனு அளிக்கச் சென்ற அந்தக் கிராம மக்களை ஆட்சியர், ‘கெட் அவுட்’ சொல்லி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது!  
 

செத்து மிதக்கும் மீன்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வறண்டுவருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குடிநீர் வழங்கும் பிரதான பாபநாசம் அணை, வறண்டுகிடக்கிறது. அந்த அணையில் 9 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. குட்டைபோல தண்ணீர் கிடப்பதால் அணையில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்கின்றன. இந்த நிலையில், சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சுமார் 5,000 பேர் வசிக்கும் இந்தக்  கிராமத்தில், போதுமான குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்டதூரம் செல்லவேண்டிய நிலை இருக்கிறது. அதனால், தங்கள் பகுதிக்கு தாமிரபரணி குடிதண்ணீர் வழங்க வலியுறுத்துகின்றனர். 
 

இந்தக் கோரிக்கைக்காக வட்டாட்சியர் அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் , தாமிரபரணி வடிகால் வாரியப் பொறியாளர் அலுவலகம் எனப் பல இடங்களிலும் தொடர்ந்து பலமுறை மனு அளித்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஆகிய நாள்களில் மனு அளித்தும் இதுவரை குடிநீர் வரவில்லை. அதற்காக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் கோரி போராட்டம்

அதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். அங்கு, சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கிராமத்தைச் சேர்ந்த சிலரை மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கக் காவல் துறையினர் அனுமதித்தனர். ஆட்சியரைச் சந்தித்து  அவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தார்கள். 

அப்போது, ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அவர்களிடம், ‘முற்றுகையிட்டால் உடனே தண்ணீர் கிடைத்துவிடுமா? மனுவைக் கொடுத்துவிட்டுப் போங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதனால், மனுவைக் கொடுத்துவிட்டு மீண்டும் தங்கள் குறையைச் சொல்ல முயன்றபோது, ‘கெட் அவுட்’ எனச் சொல்லி வெளியேற்றியுள்ளார். அதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
 

 

காலிக்குடங்களுடன் முற்றுகை

 

இதுகுறித்துப் பேசிய  கிராம மக்கள், ’’எங்கள் பகுதியில் குடிதண்ணீர்ப் பிரச்னை நிலவுவதால், தாமிரபரணித் தண்ணீர் கேட்டு பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனாலும், இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, தொகுதிக்கு உட்பட்ட எங்க கிராமத்திலேயே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கும், ஒரு பேரல் தண்ணீர் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை பதில் இல்லை, அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது, அவரும் எங்களை வெளியே போகச்சொல்லி விரட்டுகிறார். எங்கள் கிராமத்தின் வழியாகப் பல ஊர்களுக்கு தாமிரபரணித் தண்ணீர் சென்றபோதிலும், எங்களுக்கு மட்டும் கொடுக்க மறுப்பது ஏன் என்பது புரியவில்லை’’ என்று வருத்தப்படுகிறார்கள். 

இந்தச் செய்தி அன்று சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. 

 (Latest update 13.06.2019 )

ஆனால், இந்த செய்தி தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மறுப்புத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ’குடிநீர் கேட்டு பொதுமக்கள் வந்திருந்தபோது நான் அலுவலகத்திலேயே இல்லை. ஆய்வுப்பணிக்காக குற்றாலம் சென்றிருந்தேன். மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட அலுவலரைச் சந்தித்துதான் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட ஆட்சியருக்கும் அவருடைய அலுவலகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

களத்தில் இருந்த பொதுமக்கள் ஆதங்கமும் ஆவேசமுமாக அளித்த தகவலின் அடிப்படையிலேயே செய்தி வெளியிடப்பட்டது. மற்றபடி ஆட்சியருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை. தனிநபர் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிடுவது எப்போதும் விகடனின் நோக்கம் கிடையாது. இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறோம்!