OPS: `இப்ப நிலைமை சரியில்ல; நான் பேசி வாங்கித் தர்றேன்!'‍ - பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ் | O.Pannerselvam camped in Delhi to get ministry for his son

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (31/05/2019)

கடைசி தொடர்பு:18:58 (01/06/2019)

`இப்ப நிலைமை சரியில்ல; நான் பேசி வாங்கித் தர்றேன்!'‍ - பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. புதிய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகத்திலிருந்து யாரும் அமைச்சராகவில்லை. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய இருவர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மகன் ரவீந்திரநாத்துக்குப் பதவி பெற்றுத் தர கடும் முயற்சி எடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், ``மகனுக்குப் பதவி வாங்கியே தீருவேன்" என டெல்லியிலேயே ஓ.பி.எஸ் முகாமிட்டுள்ளாராம்.

டெல்லியில் ஓபிஎஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ``மோடி பதவியேற்பு விழாவுக்குச் சென்ற அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் இன்று (மே 31) காலை 8.45, 9, 10.05,10.15 மணி விமானங்களில் அடுத்தடுத்து சென்னை திரும்பிவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10.05 மணி விமானத்தில் வந்துவிட்டார். ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மட்டும் சென்னை திரும்பாமல் டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என நம்பியிருந்தவருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் கடும் அப்செட்டானவர் டெல்லியிலேயே தங்கிவிட்டார். முன்னாள் அமைச்சர் ‘வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வேண்டும்’ என முதல்வர் எடப்பாடி அரசியல் செய்ததால்தான், தன் மகனுக்கு அமைச்சர் பதவி பறிபோய்விட்டது என வருத்தத்தில் உள்ளார். டெல்லியிலுள்ள பி.ஜே.பி. தலைவர்கள் சிலருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். குடும்பத்தினரின் கடும் நெருக்கடி காரணமாக, மகனை அமைச்சர் ஆக்கிவிட்டுத்தான் சென்னை திரும்ப வேண்டுமென  முடிவெடுத்திருக்கிறார்” என்றனர்.

ரவீந்திரநாத் குமார்

மத்திய அமைச்சர் பதவி, ஓ.பி.எஸ்ஸுக்கு மானப் பிரச்னையாக மாறிவிட்டதாம். ``ஊர் முழுக்க நான் அமைச்சர் ஆகிவிடுவேனு சொல்லிட்டு, இப்ப பதவி இல்லைனா, எந்த முகத்த வச்சுகிட்டு ஊருக்குப் போவேன்” என்று நேற்றிரவு ரவீந்திரநாத் ஆடிய ஆட்டத்தில், ஓ.பி.எஸ். நொந்துபோய்விட்டாராம். ``பொறுமையா இருப்பா. இப்ப நிலைமை சரியில்ல. நான் பேசி வாங்கித் தர்றேன்” என அவர் சமாதானம் கூறியதை, ஓ.பி.எஸ் குடும்பம் ஏற்கவில்லையாம். குடும்பத்தின் நெருக்கடி காரணமாகவே அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் பாசிட்டிவ் சிக்னல் கிடைக்காதபட்சத்தில், இன்றே அவர் சென்னை திரும்புவார் என்றும், சிக்னல் கிடைத்தால் ஓரிரு நாள்கள் தங்கியிருந்து, பதவி விவகாரத்தை முடித்துவிட்டுத் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.