`நீங்கதான் தூக்கணுமா; நாங்களும் தூக்குவோம்!'- இளவட்டக்கல்லை தூக்க களமிறங்கிய கிராமத்துப் பெண்கள் | traditional games played in village temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (31/05/2019)

கடைசி தொடர்பு:14:40 (31/05/2019)

`நீங்கதான் தூக்கணுமா; நாங்களும் தூக்குவோம்!'- இளவட்டக்கல்லை தூக்க களமிறங்கிய கிராமத்துப் பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சிப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டதுடன், பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இளவட்டக்கல்லை தூக்க களமிறங்கிய பெண்கள்

தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி அருகில் உள்ளது அயன்வடமலாபுரம் கிராமம். இங்குள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் உள்ள மக்களின் பங்களிப்பாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதில், வாட்டர் பில்டர், ஸ்பீக்கர், இருக்கைகள், பாடநூல்கள், தலைவர்கள் படம், கருத்துப் படங்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் சீர்வரிசைப் பொருள்களை கையில் ஏந்தியும், தலையில் தூக்கியும் மேளதாளம் முழங்க பள்ளியில் கொண்டு சேர்த்தனர். சீர்வரிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இளவட்டக்கல்லை தூக்கிய ஆண்

முதலில், பெண்களுக்கான திருகை சுற்றுதல் போட்டியும், உலக்கை குத்துதல் போட்டியும் நடைபெற்றன. திருகையில் தானியத்தைப் போட்டு குறுகிய நேரத்தில் திருகையில் சுற்றி மாவாக்க வேண்டும். 14 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் 93 வயது வெங்கட லெட்சுமி பாட்டியம்மா முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து, ஆண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 100 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லுக்கு பூஜை செய்யப்பட்டது. இளவட்டக்கல்லை தூக்க முயன்றது 16 ஆண்கள். ஆனால், விதிமுறைப்படி தூக்கியது 6 பேர் மட்டுமே. இந்த 6 பேருமே 40 வயதுக்காரர்கள். ``ஆம்பளைங்க மட்டும்தான் தூக்கணுமா.. நாங்களும் தூக்குவோம்” எனச் சொல்லி சில பெண்களும் தூக்க முயன்றனர். ஆனால், அவர்களால் உருட்டிப் போட மட்டுமே முடிந்தது.

உலக்கை குத்துதல் போட்டி

தொடர்ந்து, ஆண்களுக்கான தேங்காய் உறியடி போட்டி நடந்தது. சணல் சாக்கினுள் புளியமரத்து இலைகளைப் பரப்பி, அதனுள் தேங்காயையும் வைத்து எளிதில் தேங்காய் உடையாதபடி இறுக்கமாகக் கட்டப்பட்டது. சணல் பை, கயிறு கட்டி ஏற்றி இறக்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர், கையில் ஒரு கட்டையை வைத்து தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேங்காயை உடைக்க விடாமல், இரண்டு பக்கத்தில் இருந்தும் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். இதைத் தாண்டி, தேங்காயை உடைக்க வேண்டும். இதுதான் விதிமுறை. இளவட்டக்கல் தூக்கும் போட்டியும், தேங்காய் உறியடி போட்டியும் நீண்ட நேரம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறுவர், சிறுமியர்களுக்கான மியூசிக்கல் சேர் போட்டி, பெண்களுக்கான பல்லாங்குழி, புளியமுத்து செதுக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பள்ளிக்கு சீர்வரிகை வழங்கிய பெண்கள்

இதுகுறித்து அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் கூறுகையில், ``எங்க கிராமத்துல காளியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு வருஷமும் வைகாசி மாசம் நடக்கும். இக்கோயில் திருவிழாவின் மூணாவது நாள் மஞ்சள் நீர் விளையாட்டுகளுடன் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவோம். திருகை சுற்றுதல், உலக்கை குத்துதல், பல்லாங்குழி, இளவட்டக்கல் உள்ளிட்ட பல விளையாட்டுகளைத் தொடர்ந்து 35-வது வருஷமா நடத்திட்டு வர்றோம். இந்த ஊர்ல உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் இருக்காங்க.

சீர்வரிசையுடன் வரும் ஊர் மக்கள்

இந்தத் திருவிழாவுக்கு மட்டும்தான் கூடுவோம். விளையாட்டுப் போட்டிகளில்கூட பாரம்பர்யம் மாறக்கூடாதுன்னுதான் பழைய விளையாட்டுகளை நடத்துறோம். மாணவ, மாணவிகளின் சேர்க்கை போதுமான அளவில் இல்லாததால்தான் அரசுப் பள்ளிகள் மூடும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமை எங்க ஊரு பள்ளிக்கூடத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பள்ளியில் வசதிகளையும் தரத்தையும் மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சீர்வரிசைகள் வழங்கியுள்ளோம்.

பல்லாங்குழி விளையாடும் பெண்கள்

மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்திட எங்களால் முடிந்த இது ஒரு சிறிய முயற்சிதான். இந்த வருஷம், எங்க கிராமத்துப் பிள்ளைகள் படிக்கிற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களை கல்விச்சீரா கொடுத்ததைப் பெருமையா நினைக்கிறோம். இதைப் போல, எல்லா கிராம மக்களும் அந்தந்த கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு இதுபோன்ற சீர்வரிசைகள் அளிக்க முன்வர வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க