`விஜயதரணி கூறியது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்!'- கொந்தளித்த வசந்தகுமார் | H.Vasanthakumar interview

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (31/05/2019)

கடைசி தொடர்பு:15:10 (31/05/2019)

`விஜயதரணி கூறியது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்!'- கொந்தளித்த வசந்தகுமார்

``விஜயதரணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை'' என வசந்தகுமார் எம்.பி தெரிவித்தார்.

வசந்தகுமார்


``கட்சி தலைமையை மிரட்டி சிலர் சீட் வாங்கியுள்ளனர். கன்னியாகுமரி தொகுதியில் உள்ளூரைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பு தராமல் வசந்தகுமாருக்கு சீட் வழங்கியுள்ளனர்'' என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பேசியிருந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் இப்போதைய முக்கியமான பிரச்னையாக என் கவனத்துக்கு வந்தது நாகர்கோவில் தண்ணீர் பிரச்னை. நாகர்கோவிலில் பத்து நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. சரியான நேரத்துக்கு தண்ணீர் வரவில்லை. அவசரகால தேவை என்பதால் அவசரமாக நடவடிக்கை எடுத்து தாகத்தை தீர்க்க வேண்டும். அடுத்து, வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம். அதற்காக நான்கு இடங்களில் எனது கடைகளில் பாக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பயோடேட்டாவை போட்டால் அதை எடுத்து சரிபார்த்து பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

 

வசந்தகுமார்

சுற்றுலாத் தலங்களில் மக்கள் அதிக அளவு வர வேண்டும். கன்னியாகுமரியில் அதிக தங்கும் விடுதிகள் இருப்பதால் அதிலுள்ள கழிவுகள் கடலில் கலக்கின்றன. குமரி மாவட்டத்தின் கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் கட்சித் தலைமையை மிரட்டி சீட் வாங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். நான் அந்தப் பேட்டியைப் பார்க்கவில்லை. நான் எம்.ஏ.படித்திருக்கிறேன். அதற்கேற்ப என் வார்த்தைகள் வரும். விஜயதரணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சிக் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.

நான் சீட்டு வாங்குவதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. வெற்றிபெற வாய்ப்பில்லை என தெரிந்தும் 2014-ல் போட்டியிட்டேன். எனக்கு கட்சிதான் சீட் தந்தது. குமரி மாவட்டத்தில் பல குளங்களைக் காணவில்லை. இருக்கின்ற குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி, ஆழப்படுத்த வேண்டும். நாங்குநேரியில் 51 குளங்கள் ஆழப்படுத்தினேன். அதுபோன்ற திட்டத்தை கலெக்டரிடம் பேசி குளங்களை தூர்வார நடவடிக்கை எடுப்பேன். தென்னகத்தில் ஒரு சீட்டுகூட கிடைக்காததால் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என நினைக்கிறேன்" என்றார்.