நோ அழைப்பிதழ்; அப்செட்டில் அதிகாரிகள் - குழப்பத்துடன் தொடங்கிய ஏற்காடு கோடை விழா! | Salem District Administration in the woes of Yercaud Summer Festival

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (31/05/2019)

கடைசி தொடர்பு:16:56 (31/05/2019)

நோ அழைப்பிதழ்; அப்செட்டில் அதிகாரிகள் - குழப்பத்துடன் தொடங்கிய ஏற்காடு கோடை விழா!

ஏற்காடு

இந்த ஆண்டின் 44-வது ஏற்காடு கோடை விழா, இன்று (31.5.2019) காலை தொடங்கியது. கோடைவிழாவுக்கான பணிகள் இரவு பகலாகச் செய்தும் நிறைவுபெறவில்லை.  ஏற்காடு கோடை விழா நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று இறுதிவரை தெரிவிக்காததால், சேலம் மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் இருந்தது.  

இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ''ஒவ்வொரு வருடமும் ஏற்காடு கோடை விழா மே மாதம் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், ஏற்காடு கோடை விழா நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. கோடை விழா  நிறைவு நாளுக்கு அடுத்த நாள் பள்ளி திறக்கப்பட இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.

ஏற்காடு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு, கடந்த 2 வருடமாக அவருடைய  தலைமையிலேயே கோடை விழா நடைபெற்றது. நடந்துமுடிந்த  17-வது நாடாளுமன்றத் தேர்தலில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்ந்துள்ள அ.தி.மு.க,  தன் சொந்த மாவட்டத்திலேயே படுதோல்வி அடைந்ததாலும், பாரத பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்வதாலும் ஏற்காடு கோடை விழாவிற்கு அவரால் வர இயலாது. முதல்வரை அடுத்து வேறு துறை அமைச்சர்கள் யாராவது வருவார்களா... என இறுதி வரை எதிர்பார்த்தோம். அதற்கான விவரம் எதுவும் தலைமையிடமிருந்து வரவில்லை. அதனால், அழைப்பிதழ்கூட அடிக்க முடியாத குழப்பத்தில் மாவட்ட நிர்வாகம் இருந்தது. ஆனால் ஏற்காடு கோடை விழா நிகழ்ச்சிக்காகப் பல லட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு, தடபுடலாக அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. அரசுத் துறை சார்பாக ஆட்சியாளர்கள் யார் வரப்போகிறார்கள் என்பது நிகழ்ச்சி நடைபெறும்போதே தெரியவரும் என்ற குழப்பத்தில் இருந்தோம்'' என்கிறார்கள்.

ஏற்காடு

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ''ஏற்காடு கோடைவிழா திடீரெனத் தயாராவதால் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், பாரத பிரதமர் பதவியேற்பு விழாவுக்குச் சென்றுவிட்டதால், ஏற்காடு கோடை விழாவுக்கு யார் வர இருக்கிறார்கள் என்ற தகவல், தலைமையிடமிருந்து எங்களுக்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை. அதனால், அழைப்பிதழ் தயாரிக்கவில்லை'' என்றார்.