அடுத்த தமிழகத் தலைவர் யார்? - புது முகத்தைத் தேடும் பி.ஜே.பி...! | National BJP searching new face for tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/06/2019)

கடைசி தொடர்பு:06:30 (01/06/2019)

அடுத்த தமிழகத் தலைவர் யார்? - புது முகத்தைத் தேடும் பி.ஜே.பி...!

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 5.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற பி.ஜே.பி,  2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.6 சதவிகிதம் வாக்குகளையே பெற்றுள்ளது.

மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது பி.ஜே.பி. மோடி2.0 அமைச்சரவை பதவியேற்றுவிட்டது. ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திராவில் பி.ஜே.பி-யால் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 5.5 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற பி.ஜே.பி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.6 சதவிகிதம் வாக்குகளையே பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக மோடி மூன்று முறையும், அமித் ஷா ஐந்து முறையும் தமிழகம் வந்திருந்தனர். அப்படி இருந்தும் கூட தேனி தொகுதியில் மட்டுமே அந்தக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், தமிழக பி.ஜே.பி மீது, தேசியத் தலைவர்கள் கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள். இதையடுத்து, தமிழக பி.ஜே.பி-யில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

மோடி, அமித்ஷா

தற்போது, தமிழக பி.ஜே.பி தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. தேர்தல் காரணமாக தலைமை மாற்றப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்துவிட்டதால், அடுத்த தலைவர் யார்? என்பதுதான் தமிழக பி.ஜே.பி தரப்பில் ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருக்கிறது. வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என்று தலைவர் பதவிக்குப் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்துக்கான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பணியை கவனித்து வருபவர் அமித் ஷா. இதற்காக, அவர் பல இடங்களிலிருந்து ரிப்போர்ட்டும் வாங்கியிருக்கிறார். ``அதன் அடிப்படையில்தான், தலைமை தேர்ந்தெடுப்பார்கள்" என்று பி.ஜே.பி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதுகுறித்து பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ``பெண்களுக்கு வாய்ப்பளித்தால் மாற்றம் வரும் என்றுதான் தமிழிசைக்கு வாய்ப்பு கொடுத்தனர். இரண்டாவது முறையும் பதவியை நீட்டித்தனர். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் மூன்றாம் அணியாக நின்றோம். 2016-ம் ஆண்டு தனித்து நின்றோம். எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை. தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தலைமை கவனித்து வருகிறது. தமிழக பி.ஜே.பி தலைவர்களின் செயல்பாடுகளும் தோல்விக்கு ஓர் முக்கிய காரணம் என்று கருதுகின்றனர். இதனால், இந்த முறை சர்ச்சை பட்டியலில் இருக்கும் தலைவர்களுக்கு வாய்ப்பில்லை. அதேபோல, பெண்களுக்கும் வாய்ப்பு குறைவுதான்.

தமிழிசை

அடுத்த தலைமை ஒரு புதுமுகமாக இருக்க வேண்டும் என்று தேசிய தலைமை நினைக்கிறது. இதற்கு சில நிபந்தனைகளும் இருக்கின்றன. தலைவராக நியமிக்கப்பட உள்ளவர் மீடியா விரும்பியாக இருக்கக் கூடாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை, இடையில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் அவர் போட்டியிடக் கூடாது என்பது மற்றொரு முக்கிய நிபந்தனை. அந்த வரிசையில் மாநில இளைஞரணி தலைவராக உள்ள வினோத், தேசிய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் சற்று முன்னணியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு, தேசிய அளவிலும் நல்ல பெயர் இருப்பதால், தலைவர் பதவிக்கான வாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கிறது.

பலரது பெயர்கள் அடிபட்டாலும், கடைசி நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் கைகாட்டும் நபர் தலைமை பதவியில் அமரவைக்கப்படலாம். யாராக இருந்தாலும், கடந்த காலச் சம்பவங்களை மனதில் வைத்தே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்" என்றனர்.

அமித்ஷா

மோடி பதவியேற்பு விழாவுக்கு, தமிழகத்திலிருந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு சென்றுள்ளது. மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் அமித் ஷா பேசியுள்ளார். சம்பிரதாயத்துக்காக நலம் விசாரித்துவிட்டு, தேர்தல் தோல்விக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார் அமித் ஷா. இன்னும் சில நாள்களில் தமிழக பி.ஜே.பி-யில் மாற்றம் உறுதி என்கின்றனர் தலைமை நிர்வாகிகள்.