216 அடி உயர கோபுரத்தில் பாதுகாப்பு இல்லாமல் பணி - கண்டுகொள்ளுமா தொல்லியல் துறை? | safety equipment not provided for thanjavur big temple labours

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (01/06/2019)

கடைசி தொடர்பு:07:15 (01/06/2019)

216 அடி உயர கோபுரத்தில் பாதுகாப்பு இல்லாமல் பணி - கண்டுகொள்ளுமா தொல்லியல் துறை?

தஞ்சாவூர் பெரிய கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் பழைமை மாறாமல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பு உபரணங்கள் எதுவும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். தொல்லியல் துறை இதில் மெத்தனமாக இல்லாமல் அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள் அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவோ அல்லது மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரியகோயில் சோழர்களின் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. மேலும், யுனெஸ்கோவால் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்டு உலகப்புகழ் பெற்று விளங்கி வருகிறது. தமிழக அரசின் அறநிலையத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. எனவே, சமூக ஆர்வலர்கள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் கோயிலின் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரிய கோயில்

கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழாவுக்காக அனைத்துக் கோபுரங்களும் வேதியியல் முறையில் சுத்தம் செய்யப்பட்டது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோயிலின் கோபுரங்கள் மற்றும் நுழைவாயில்கள் ஹைட்ரோபோபிக் என்ற சிலிக்கான் கலவை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதன்படி, மராட்டியர், கேரளாந்தகன், ராஜராஜன் வாயிற்கோபுரங்கள் சுத்தம் செய்து பணிகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து 216 அடி உயரமுள்ள விமான கோபுரத்தைச் சாரம் அமைத்து சுத்தம் செய்யும் பணியில் சுமார் 30 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர்கள் கோபுரத்தில் ஏறி, இறங்குவதற்கு இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டுள்ளன.  உயரத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபரணங்கள் இல்லை என்றும் இதனால் ஆபத்தான முறையில் வேலை பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பெரிய கோயில்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ``உலகப் பிரசித்திபெற்ற பெரிய கோயிலில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்று. கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தின் உயரத்தைக் கண்டு அதிசயித்துப் பார்ப்பார்கள். 216 அடி உயரம் கொண்ட கோபுரத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் பணி செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புராதன சின்னத்தைப் பராமரிப்பு பணி செய்யும்போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். உடனே அவர்களுக்குப் பாதுகாப்பு வலை, தலைக்கவசம், பெல்ட் ஆகியவற்றை வழங்குவதற்கு தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மெத்தனமாக இருக்கக் கூடாது" என வலியுறுத்தியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க