`மோடி எதிர்ப்பலையா? அ.தி.மு.க எதிர்ப்பலையா?’ - கேள்வி எழுப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி | Auditor Gurumoorthy speaks about Election results

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (01/06/2019)

கடைசி தொடர்பு:10:24 (01/06/2019)

`மோடி எதிர்ப்பலையா? அ.தி.மு.க எதிர்ப்பலையா?’ - கேள்வி எழுப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி

``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததுதான், தமிழகத்தில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு காரணம்" என்று பி.ஜே.பி-யினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக இருந்துவந்த தேர்தல் பரபரப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. மத்தியில் தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தாலும், பி.ஜே.பி கூட்டணியால் தமிழகத்தில் ஒரு இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. தேர்தலுக்கு முன்பு, இது ``மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி" என்று கூறிவந்த அரசியல் கட்சியினர், தற்போது தேர்தல் தோல்விக்கு பரஸ்பரம் மற்ற கட்சியினரை குற்றம் சொல்லி புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

குருமூர்த்தி

குறிப்பாக, பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததாலும், தமிழகத்தில் நிலவிய மோடி எதிர்ப்பலையாலும் தான் தாங்கள் தோற்றுவிட்டதாக அ.தி.மு.க-வினர் கூறி வருகின்றனர். அதேபோல, ``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததுதான், தமிழகத்தில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு காரணம்" என்று பி.ஜே.பி-யினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், ஆர்.பி.ஐ வங்கியின் பகுதி நேர இயக்குநரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``அ.தி.மு.க இரண்டு தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளிலும், ஐந்து தொகுதிகளில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளிலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளில் ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

குருமூர்த்தி

ஆனால், பி.ஜே.பி இரண்டு தொகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும், மூன்று லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளிலும் தோல்வியடைந்துள்ளது. மோடி எதிர்ப்பலை என்றால், பி.ஜே.பி. அனைத்துத் தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சம் வாக்குகளில் தோல்வியடைந்திருக்க வேண்டும். அப்படியென்றால், யார் மீது எதிர்ப்பலை நிலவுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க வின் அதிகாரப்பூர்வ  பத்திரிகையான நமது அம்மாவில், தமிழகத்தில் அதிமுகவின் தோல்விக்கு பா.ஜ.க வுக்கு தமிழகத்தில் நிலவிய எதிர்ப்பலை காரணமாக அமைந்ததாகக்  குறிப்பிடப்பட்டிருந்தது.