``தொடர்ந்து பிரச்னை செய்தால்...!” - காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த மனித உரிமை ஆணையம் #Sterlite | Human Rights Commission warned police officers for attacking the activist

வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (01/06/2019)

கடைசி தொடர்பு:08:35 (01/06/2019)

``தொடர்ந்து பிரச்னை செய்தால்...!” - காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த மனித உரிமை ஆணையம் #Sterlite

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அக்ரி பரமசிவம் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்து மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்தியது.

மனித உரிமை ஆணையம் -  புகார் அளித்த அக்ரி பரமசிவம்


ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அக்ரி பரமசிவம், தன்னை தாக்கியதாக காவல்துறை அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் இன்று நாகர்கோவிலில் வைத்து விசாரணை நடத்தினார். இதில் அக்ரி பரமசிவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு அக்ரி பரமசிவன் கூறுகையில், ``ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் கொடுப்பதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டேன். காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என என்னிடம் எழுதி வாங்கினார்கள். கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலையில் 3.10 மணிக்கு புதுக்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை, சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுத பெருமாள், தலைமைக் காவலர் அருள் முருகன், காவலர்கள் சாமிக்கண்ணு, ஜெயகோபால் உள்ளிட்ட ஆறுபேரும் என்னை அழைத்துச்சென்றனர்.

மனித உரிமை கமிஷன் விசாரணை

புதுக்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள கட்டடத்தில் வைத்து அடித்தனர். பின்னர் என்னை அடித்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள். 28 நாள்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தேன். பிறகு காவல்துறை அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்துக்குப் புகார் அளித்தேன். அதன்பேரில் இன்று நாகர்கோவிலில் விசாரணை நடந்தது. இதில் காவல்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். நானும் ஆஜரானேன். காவலர்களுக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் நல்ல கருத்துரைகளை அறிவுரையாகக் கூறினார். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தல் செய்வது, அடிப்பதை ஏற்க முடியாது. என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள், அவர்கள் சந்திப்பார்கள். இனி தொடர்ந்து பிரச்னை செய்தால் சென்னையில் விசாரணைக்கு வர வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். இந்தப் புகார் குறித்த அடுத்தகட்ட விசாரணை ஜூலை 19-ல் நடக்கிறது. அப்போது இருதரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். இப்போது நான் வாடகைக்கு இருக்கும் வீட்டிலிருந்து என்னை வெளியேறும்படி மிரட்டுகிறார்கள். இதுவரை நான்கு வீடுகள் மாறிவிட்டேன்" என்றார்.