`தோல்வி விரக்தியால் பழிவாங்குகிறார்கள்!’ - 8 வழிச் சாலை மேல்முறையீட்டால் கொதிக்கும் விவசாயிகள் | TN government appealed for Chennai-Salem expressway

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (01/06/2019)

கடைசி தொடர்பு:09:53 (01/06/2019)

`தோல்வி விரக்தியால் பழிவாங்குகிறார்கள்!’ - 8 வழிச் சாலை மேல்முறையீட்டால் கொதிக்கும் விவசாயிகள்

சேலம் 8 வழிச் சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அது பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு தடை விதித்துக் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு 8 வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. அது தேர்தல் நேரம் என்பதால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வந்தது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது தமிழக அரசு.

மோகனசுந்தரம்

இத்தகவல் 8 வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும், கண்டனப் போராட்டங்களும் நடைபெற்றதோடு `எங்கள் உயிரைக் கொடுத்தாவது விவசாயத்தை அழிக்கும் 8 வழிச் சாலை திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்'' என்ற கோஷங்களும் எழுப்பினார்கள்.

இதுபற்றி பேசிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பூலாவரி மோகனசுந்தரம், ``சென்னை உயர் நீதிமன்றம் இரு தரப்பையும் விசாரித்துத் தெளிவான தீர்ப்பை அறிவித்தது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தற்போது தீர்ப்பை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு சென்றிருக்கிறார்கள்.

முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் 7 சதவிகித மக்கள் மட்டுமே 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்லுகிறார். இது முதல்வருக்கு அழகில்லை. அவர் சொல்லுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கிறார். 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை 100 சதவிகித மக்கள் எதிர்க்கிறார்கள். உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் விவசாயத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்குவார்கள்.

சிவகாமிஒருவேளை எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் தூத்துக்குடியில் நடந்ததைப் போல எங்களைத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டுத்தான் எங்கள் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்'' என்றார்.

இதுபற்றி விவசாயி சிவகாமி, ``தமிழக அரசு 8 வழிச் சாலை திட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்து கேட்காமல் சர்வாதிகாரத்தோடு உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இது தேர்தல் தோல்வியின் விரத்தியில் எங்களுக்குப் பதிலடி கொடுக்கச் சென்றிருப்பதாகப் பார்க்கிறோம். இந்த சர்வாதிகாரத்துக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாட்டில் ஜனநாயகம் நிலைக்கவும் எங்கள் வாழ்வுரிமையை நிலை நாட்டவும் எத்தகைய போராட்டங்களையும் மேற்கொள்ளுவோம். யாருக்காகவும் எங்கள் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்றார்.