`இந்தக் குழந்தைகள் யாருது; காவல்துறை என்ன செய்யுது!’- வடமாநில பெண்களை சந்தேகிக்கும் வேலூர் மக்கள் | Vellore people doubt with north peoples

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (01/06/2019)

கடைசி தொடர்பு:11:10 (01/06/2019)

`இந்தக் குழந்தைகள் யாருது; காவல்துறை என்ன செய்யுது!’- வடமாநில பெண்களை சந்தேகிக்கும் வேலூர் மக்கள்

வேலூரில் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்கள் அதிகளவு சுற்றித்திரிகிறார்கள். குழந்தை கடத்தும் கும்பலாக இருக்குமோ என்கிற சந்தேகத்தால் பொதுமக்கள் அந்தப் பெண்களைப் பிடித்துத் தாக்கும் சம்பவங்களும் நிகழத் தொடங்கியிருக்கின்றன.

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்

வடமாநிலங்களிலிருந்து குழந்தை கடத்தும் கும்பல்கள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற வதந்தியால் கடந்த ஆண்டு தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் நிறைய பேர் தாக்கப்பட்டனர். சிலர் அடித்துக் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவமும் நிகழ்ந்தது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வடமாநிலத்தவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. சந்தேகிக்கப்படும் வகையில் சுற்றித்திரியும் வடமாநிலத்தவர்களின் நடமாட்டத்தையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். 

குழந்தையுடன் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் வடமாநில பெண்கள் நிறைய பேர் கைக்குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள் கதறி அழுகின்றன. பேருந்து நிலையங்கள் உட்பட மக்கள் கூடும் பொது இடங்களில் கையேந்துகின்றனர். அந்தப் பெண்கள் யார், வேலூருக்கு வந்தது எப்படி, குழந்தைகள் அவர்களுடையதுதானா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். சில இடங்களில் குழந்தைக் கடத்தல் கும்பலாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் வடமாநில பெண்கள் மீது தாக்குதல்களும் நடந்திருக்கின்றன. எனவே, குழந்தைகளுடன் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்களின் பின்னணியைக் காவல்துறை கண்டறிய வேண்டும். விபரீத சம்பவங்கள் ஏற்படுவதற்குள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.