`கூரைகள் ஓட்டை; மழை வந்தால் கஷ்டம்தான்: விருதுநகர் அரசுப் பள்ளியின் 2 ஆண்டு அவலத்தை சரி செய்த இளைஞர்கள் | village youngsters works in reconstruction of school

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (01/06/2019)

கடைசி தொடர்பு:11:40 (01/06/2019)

`கூரைகள் ஓட்டை; மழை வந்தால் கஷ்டம்தான்: விருதுநகர் அரசுப் பள்ளியின் 2 ஆண்டு அவலத்தை சரி செய்த இளைஞர்கள்

இளைஞர்கள்

கிருஷ்ணன்கோயில் அருகே சேதமடைந்திருந்த அரசுப் பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிப்பறையை கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி சீரமைத்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கிவிடுவதால் மாணவர்கள் உள்ளே அமர முடியாமல் தவித்தனர். தற்போது பள்ளி திறக்க உள்ள நேரத்தில் `மாற்றம் இளைஞர்கள் குழு' என்ற தன்னார்வம் கொண்ட கிராம இளைஞர்கள் வகுப்பறையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்கள்

இதுகுறித்து அந்தக் குழுவைச் சேர்ந்த அழகுராஜா என்பவரிடம் கேட்டபோது, ``வகுப்பறையின் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகள் இடைவெளியில் இருந்ததாலும், சில ஓடுகள் உடைந்து காணப்பட்டதாலும் மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீர் விழும். கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை இருந்தது. எப்படியாவது சீரமைக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக சீரமைக்க முடியவில்லை.

இளைஞர்கள்

தற்போது தெரிந்த ஒருவர் நிதி அளித்தார். மீதிப் பணத்தை பள்ளித் தலைமையாசிரியர் வழங்கினார். அதில் பொருள்களை வாங்கி பணியைத் தொடங்கினோம். 3 நாள்கள் வேலை செய்துள்ளோம். எங்கள் குழுவைச் சேர்ந்த 10 பேர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாளைக்குள் பணி நிறைவு பெற்றுவிடும். எங்கள் அமைப்பின் மூலம் கிராம மக்களை ஒன்றிணைத்து அரசுப் பள்ளிக்கு தேவையான சீர்வரிசை வழங்கியுள்ளோம். எங்களால் முடிந்த சிறுசிறு உதவிகளையும் பள்ளிக்காக செய்துகொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.