``பெட்ரோலுக்கு ஹெல்மெட் கட்டாயம்!” - அமலுக்கு வந்த `விபத்தில்லா திருச்செந்தூர்’ திட்டம் | No helmet and no petrol - new Trichendur programme started

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (01/06/2019)

கடைசி தொடர்பு:12:55 (01/06/2019)

``பெட்ரோலுக்கு ஹெல்மெட் கட்டாயம்!” - அமலுக்கு வந்த `விபத்தில்லா திருச்செந்தூர்’ திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீஸ் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் `விபத்தில்லா திருச்செந்தூர் திட்டம்' இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அண்மைக் காலங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதில், சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்களே. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததும்  உயிரிழப்புக்கு காரணம்.

இதுபோன்ற விபத்துகளை குறைக்கும் முயற்சியாக திருச்செந்தூர் டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களில், ஹெல்மெட் அணியாதோருக்கு பெட்ரோல் கிடையாது என்ற புதிய முயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, `விபத்தில்லா திருச்செந்தூர் திட்டம்' இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்

இதன் மூலம் ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும். இந்த புதிய முயற்சி குறித்து போலீஸார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நோட்டீஸ் அடித்தும், உள்ளூர் டிவி-க்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினர். இந்த நிலையில் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் திருச்செந்தூர் சப்-டிவிஷனுக்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரன்பட்டணம், பரமன்குறிச்சி பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் இன்று காலை 9 மணி முதல் பகல் 10 மணி வரை ஹெல்மெட் அணிந்து முதலில் வந்த 30 வாடிக்கையாளர்களுக்கு பாராட்டும் விதமாக, ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்த நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. பாரத் ஹெல்மெட் அணிந்து முதலில் வந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் இலவச பெட்ரோல் வழங்கி, இது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை  விநியோகம் செய்தார். இதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பாரத் கூறுகையில், `` விபத்துகளால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகித மரணங்கள் தலைக்காயத்தால் ஏற்படுகிறது. விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற புதிய முயற்சி இன்று (ஜூன் 1-ம் தேதி) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி குறித்து கடந்த ஒரு வாரகாலமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஹெல்மெட்

எனவே, மாதத்தில் ஒரு நாள் மகிழ்ச்சி நேரம் என அறிவித்து காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதலில் ஹெல்மெட் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளோம். ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கியதால், இதன் மூலம் விபத்துகள் குறையும். அடுத்தடுத்த மாதங்களில் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த காவல்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க