`ராஜ்யசபா சீட்டுக்காக நிற்கும் `மெகா க்யூ’!’ - திணறும் எடப்பாடி பழனிசாமி! | who will got rajya sabha seat in admk

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:01 (01/06/2019)

`ராஜ்யசபா சீட்டுக்காக நிற்கும் `மெகா க்யூ’!’ - திணறும் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

`தன் மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காத விரக்தியில் இருக்கிறார் ஓ.பி.எஸ்’ இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அவர் கருதுகிறார். கடைசிவரை போராடியும் பயனில்லாமல் போய்விட்டதே என்று அதிருப்தியில் இருக்கிறார். `ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால், சீனியர்கள் கொந்தளிப்பார்கள். கட்சியில் தேவையில்லாமல் குழப்பம் ஏற்படும்’ என்பது எடப்பாடியின் எண்ணம். இதைச் சரிக்கட்ட, `இரண்டு பேரை அமைச்சரவையில் அமர்த்திவிடலாம்’ என்று பா.ஜ.க தலைமையிடம் அ.தி.மு.க சார்பில் கேட்டபோது,  `கடைசிவரை ஒரு அமைச்சர் பதவிதான் என்று கறாராக இருந்தது பா.ஜ.க. எனவே, வைத்திலிங்கத்தை அமைச்சராக்கலாம் என எடப்பாடி மற்றும் அ.தி.மு.க மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், தன் மகனுக்கு சீட் இல்லாததால் பா.ஜ.க-வுக்கு அனுப்பும் கடிதத்தில் கையொப்பமிடமாட்டேன் என மறுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்’

ராமதாஸ்

இப்படியாக அமைச்சரவை கலாட்டா முடிந்த நிலையில், அடுத்த பிரச்னையாக உருவெடுத்திருப்பது ராஜ்யசபா. எம்.எல்.ஏ-க்களின் அடிப்படையில் அ.தி.மு.கவுக்கு 3 சீட்டுகள் இருக்கிறது. இந்த மூன்று சீட்டுகளை ஒதுக்குவது எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க வட்டாரத்தில், ``கட்சியிலும், ஆட்சியிலும், நாளுக்கு நாள் நெருக்கடியை சமாளிக்கவேண்டியிருக்கிறது. ராஜ்யசபா சீட்டை ஒதுக்க இன்னும் சரியாக ஒரு மாதம் மட்டுமே உள்ளது. ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட வேண்டும். ராஜ்யசபா சீட்டுக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர். தேர்தலில் `வாஷ்அவுட்’ஆனதால், ஒப்பந்ததின்படி, அன்புமணிக்கு ஒரு சீட்டு ஒதுக்க வேண்டும் என்கின்றனர் பா.ம.க-வினர். பா.ஜ.க-வும் தனக்கொரு சீட் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. `ஏற்கெனவே சீட்டு ஒதுக்குவதிலே பாரபட்சம் காட்டுனீங்க.. இப்போ பா.ம.க-வுக்கு ராஜ்யசபா கொடுத்தீங்கன்னா எங்களுக்கும் ஒரு தொகுதி வேண்டும்’ என்கின்றனர் தே.மு.தி.க-வினர்.

 

எடப்பாடி

கூட்டணிக்கட்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அ.தி.மு.க-விலே ராஜ்யசபா சீட்டு கேட்டு பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோலத்தான் சி.வி.சண்முகத்தின் அண்ணனுக்குப் போட்டியிட சீட் கொடுப்பதற்குப் பதிலாக, ராஜ்யசபா கொடுக்கிறோம் என சமாதானப்படுத்தினார்கள். அவரும் இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டார். கோகுல இந்திரா `அம்மா இருக்கும்போது தேர்தல்ல சீட்  கொடுத்தாங்க, இப்போ சீட் கொடுக்கல ராஜ்யசபாவாச்சும் கொடுங்க’ என்கிறாராம். ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனும், கே.பி.முனுசாமியும் தங்களுக்கு சீட் வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு, `எடப்பாடி ராஜ்யசபா கொடுப்பது கடினம்’. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் தாம் போட்டியிடும் கரூர் தொகுதியில் இருக்கும் அதிகபட்சமான இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்காது. தோல்வியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஏற்கெனவே தம்பிதுரை கூறியிருந்தார். `அப்படி தோற்றால், உங்களுக்கு ராஜ்யசபா தர்றோம்’என்று கூறியிருந்தனர். இப்போது அவரும் தனக்கு ராஜ்யசபா வேண்டும் எனக் கேட்கிறார்.  ராஜ்யசபாவை யாருக்குக் கொடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கின்றனர்.