`பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறதா அரசு?'- ஸ்ரீரங்கம் கோயில் சர்ச்சை | cell phone will be ban on srirangam temple

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:25 (01/06/2019)

`பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறதா அரசு?'- ஸ்ரீரங்கம் கோயில் சர்ச்சை

ஶ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீரங்கம்

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும், பாதுகாப்பைத் தீவிரப்படுத்தப்படுத்தவும் உளவுத்துறை  உத்தரவிட்டிருந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மேலும், விசேஷ நாள்களில் வழக்கமான நாள்களை விடப் பல மடங்கு அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோயிலுக்குள் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டாலும், அவர்களின் உடைமைகள், செல்போன் மற்றும் கேமரா ஆகியவற்றைக் கொண்டு சென்று வந்தார்கள். இந்த நிலையில், கோயில் நிர்வாகம் பக்தர்கள் எடுத்துச் செல்லும் செல்போன்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டு, கோயில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ``கோயில் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் நலன் காக்கும் வண்ணம் கோயிலில் செல்போன் உபயோகத்தைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயிலின் மூன்று பிரதான நுழைவாயில்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை வைத்துக்கொள்ளக் கட்டணமாக 10 ரூபாய் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விரைவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்போன் தடை அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

நோட்டீஸ்

இது தவிர கோயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோயிலுக்குள் நுழையும் மூன்று கோபுர பிரதான நுழைவாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நுழைவாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டர் வழியாகப் பக்தர்கள் செல்லும் வகையில் நிரந்தர மெட்டல் டிடெக்டர் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புக்கு 50 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ``ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இதுவரை 2 முறை பாகிஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதாகவும், அதனால் இந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஶ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியோ, ``ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தும் செல்போன்களைப் பாதுகாக்கக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக இலவசமாகச் சேவை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் கிஷோர்குமார், ``கோயில் பாதுகாப்பு தொடர்பாகக் கோயில் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். அதே வேலையில் செல்போன் பராமரிப்புக் கட்டணம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தகோடிகளுக்கு ``இலவச காலணி" வசதியை ஏற்படுத்திருப்பதைப் போன்று, இலவசமாக செல்போன் பராமரிப்பு மையத்தையும் திருக்கோவில் சார்பாக ஏற்படுத்தித் தர வேண்டும்” என்கிறார்.

``கோயில் நிர்வாகம் ஒட்டியுள்ள நோட்டீஸ், யாரும் பார்க்காத இடத்தில் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனைகளை 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. செல்போன் எடுத்துச் செல்ல பத்து ரூபாய் விதிப்பதால், பணமில்லாதோர் கோயிலுக்கு வரக்கூடாது என்ற நிலை அதிகாரபூர்வமாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவுக்கு எதிராக அரசுக்கு மேல்முறையீடு செய்யுங்கள்” என்று இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.