10 ஆண்டுக்கால ஏக்கம் தீர்ந்தது, திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவையினால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி! | People Happy For Tiruvarur - karaikudi train services

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (01/06/2019)

கடைசி தொடர்பு:14:15 (01/06/2019)

10 ஆண்டுக்கால ஏக்கம் தீர்ந்தது, திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவையினால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி!

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாக இந்தச் சேவையானது நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்றுவந்தன. 2010-ல் தொடங்கிய அகலப் பாதைப் பணியானது முடிவடைந்த நிலையில், இன்று முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை காலை 7 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடியை நோக்கிச் செல்லும் ரயில் பாதை சரி செய்யப்பட்டுள்ளது. காலை 8.15-க்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு காரைக்குடிக்கு 2.15-க்குச் சென்றடைகிறது. சுமார் ஆறு மணி நேரப் பயண நேரமாகிறது. அதிகமான பொதுமக்கள் ரயில் சேவையை நம்பியிருந்த நிலையில், 10 ஆண்டுக்காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று இந்தச் சேவை தொடங்கியது பெரும் மகிழ்ச்சி என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி என்றாலே நம் நினைவுக்கு வருவது செட்டியார் மாளிகைகளும் உணவு வகைகளும்தான். மேலும், அங்கு கண்டுகளிக்க பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த ரயில்சேவை பெரும் உதவியாக இருக்கின்றன. ரயில் சேவையை அதிகம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்குக் காரணம் குறைந்த கட்டணம் என்பது மிக முக்கியமான ஒன்று. சாலை வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்தநிலையில், இந்த ரயில் சேவை பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலில் இருந்து இனி தாங்கள் விடுபட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கோடியக்கரை உப்பளங்களில் இருந்து ஏற்றப்படும் பொருள்களும் கருவாடு போன்ற பொருள்களும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில் சேவை மூலமாகவே மக்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து சிறு வியாபாரிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இந்த ரயில் மார்க்க வழியில் சுமார் 72 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் 60 ரயில்வே கேட்கீப்பர்கள் இதுவரை பணியமர்த்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. ரயிலிலேயே செல்லும் தற்காலிக ரயில் கேட்கீப்பர் ஒவ்வொரு ரயில்வே கேட்டில் நின்று இறங்கி ரயில்வே கேட்டை மூடிச் சென்று பின்னர் ரயில் புறப்பட்டால் கிட்டத்தட்ட ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ஏழு நிமிடங்கள் கால தாமதமாகும். மேலும், திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்வதற்கு ஆறு மணி நேரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளதாக  தெரிவிக்கின்றனர். மேலும், ரயில்வே நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஆட்கள் தேர்வு நடைபெற்றுவிட்டதாகவும் அவர்களுக்குப் பயிற்சி என்பது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரயில்வே உபயோகிப்பாளர்கள் தற்காலிகப் பணியாளர்களை ரயில்வே கேட் கீப்பர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகையால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கேட் கீப்பர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆறு மணி நேரம் பயணக்காலம் இருக்கின்ற நிலையில், சரியான கழிப்பறை வசதிகள் இல்லை என்றும் அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.