``சென்னைக்குத் தண்ணீர் வழங்க ரூ. 233 கோடியில் திட்டம் இருக்கிறது!" - அமைச்சர் வேலுமணி | Chennai water crises problem solving plans ready says minister velumani

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:20 (01/06/2019)

``சென்னைக்குத் தண்ணீர் வழங்க ரூ. 233 கோடியில் திட்டம் இருக்கிறது!" - அமைச்சர் வேலுமணி

``சென்னைக்குக் குடிநீர் வழங்க 233 கோடி ரூபாய் செலவில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் வழங்குவதற்கான திட்டங்கள் தயாராக இருக்கின்றன" என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுபாடு

தலைமைச் செயலகத்தில், தமிழக குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் வகுக்கும் ஆய்வுக் கூட்டம் கடந்த 29-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் குடிநீர் குறித்து, அரசு செயலர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி இயக்குநர் பாஸ்கரன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து ஆலோசித்தார். 

தண்ணீர் பற்றி பேசிய அமைச்சர் வேலுமணி

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, ``தமிழகத்தில் மழைப் பொழிவு குறைந்துவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனால் மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியும், புதிய பம்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. 2017-ம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது, சென்னையில் 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இன்று 560 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரையிலும், 550 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்க முடியும். அதன் பின்னர் மழை இல்லாவிட்டாலும், நவம்பர் மாதம் வரை தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்று 560 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி வரை இதே அளவு நீரை விநியோகிக்க முடியும். அதன் பின்னர் மழை பெய்யாவிட்டாலும்கூட, நவம்பர் முடிய தொடர்ந்து 500 மில்லியன் லிட்டர் வழங்கும் வகையில் அதற்கான ஆதாரங்களைத் தயார் செய்து வைத்துள்ளோம். சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அதன் பணிகளும் விரைவில் துவங்க இருக்கிறது.

இதுதவிர, 233 கோடி செலவில் சென்னைக்குப் பல திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. நெய்வேலியில் 10 புதிய ஆழ்துளைக் கிணறுகள், நெய்வேலி சுரங்கம் மற்றும் பாவணாறு ஆற்றிலிருந்தும் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூண்டி, தாமரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 11 கோடி ரூபாய் மதிப்பில் பிப்ரவரி மாதம் முதல் தினசரி 30 மில்லியன் லிட்டர் தண்ணீரும், எருமையூர் கல்குவாரியில் 10 மில்லியன் லிட்டரும் எடுக்கப்படுகிறது. ரெட்டேரி மற்றும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து 53 கோடியில் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன." என்றார் அமைச்சர்.