அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை!- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது? | SRM Students suicide issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:55 (01/06/2019)

அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை!- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்த நாள்களில் நடந்த மாணவர்களின் தற்கொலை அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை அச்சமடையச் செய்துள்ளது.

மாணவர் தற்கொலை, எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம்

காஞ்சிபுரம் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடத்தி வரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் இல்லாததாலும், கல்லூரி நிர்வாகம் அவர்களைக் கண்டு கொள்ளாததாலும் அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அளவிற்கு மிஞ்சிய சுதந்திரம் கிடைக்கிறது. இதனால் இந்தக் கல்லூரி மாணவர்கள் எளிதாகத் தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்கிறார்கள் என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலத்திலிருந்து படிக்க வரும் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதும், வெளிமாநில மாணவிகள் சிலர் தவறான பாதைக்குச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில் ஆண்டு தோறும் இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த அடுத்தடுத்த தற்கொலைகள் மாணவர்களை பீதியடையச் செய்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சவுத்ரி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்த அவர் கடந்த 27-ம் தேதி விடியற்காலை 5 மணி அளவில் விடுதியில் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முந்தைய நாளில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பி.டெக் இறுதியாண்டு படித்த மாணவி அனுப்பிரியா, கல்லூரி முடிந்த கடைசி நாளில் விடுதியில் உள்ள பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த நாள்களில் மாணவர்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதால் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பிஆர்ஓ மோகனிடம் கேட்டபோது, ``குடும்பத் தகராறு காரணமாகவே இறந்ததாக மாணவியின் பெற்றோர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அனிஷ் சவுத்ரி நான்கு பாடங்களில் ஃபெயிலாகி இருக்கிறார். தன்னால் படிக்க முடியாத பாடத்தில் சேர்த்துவிட்டார்கள் என்ற விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார். எங்கள் கல்லூரியில் மொத்தம் 65,000 பேர் படிக்கிறார்கள். அதில் 25,000 பேர் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இவர்கள் இருவரும் இறந்தது துயரமான சம்பவம். நான்கு வருடங்கள் மாணவர்கள் ஒழுங்காகப் படித்தால், பின் வரும் நாற்பது வருடங்கள் நன்றாக வாழலாம். இதை மாணவர்கள் உணரவேண்டும்” என்கிறார்.