`ஆயுதம் குறித்து எந்தக் கருத்தும் பதிவிடவில்லை!'- பா.ஜ.க புகாருக்கு பேராசிரியர் சுந்தரவள்ளி விளக்கம் | Professor Sundaravalli refuses the BJP's complaint

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:45 (01/06/2019)

`ஆயுதம் குறித்து எந்தக் கருத்தும் பதிவிடவில்லை!'- பா.ஜ.க புகாருக்கு பேராசிரியர் சுந்தரவள்ளி விளக்கம்

பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக் கருத்து வெளியிட்டதாகப் பேராசிரியர் சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க இளைஞர் அணி சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

சுந்தரவள்ளி

தமிழக பா.ஜ.க இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று முன்தினம் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக இருந்து வரும் பேராசிரியர் சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தைப் படித்தேன். அதில் அவர், ``ஜனநாயக முறைப்படியே மோடியைத் துடைத்தெறிய எண்ணுகிறோம். முடியாதென்றால் வரலாறு காட்டும் வழியைத் தயங்காது தேர்வு செய்வோம்” என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு லெனின் என்ற மணவாளன் என்ன வழி தோழர் என்று பதிவிடுகிறார். அதற்கு சுந்தரவள்ளி, ``ஆயுதம்தான்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.

சுந்தரவள்ளியின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதோடு சர்ச்சைக்குரிய பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது. பிரதமரை ஆயுதத்தால் அகற்றுவோம் என்று பதிவிடுவதன் மூலம் பிரதமர் மோடியைப் பயங்கரவாதத்தின் மூலம் படுகொலை செய்வோம் என்ற பொருளில் கூறியிருக்கிறார். சுந்தரவள்ளி பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சதி செய்யலாம் என்ற நியாயமான ஐயப்பாடும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. மேலும் தனது பயங்கரவாத கருத்தினை சமூக வலைதளத்தில் பரப்பி ஆதரவு தேடும் விதமாகவும் உள்ளது. எனவே, பேராசிரியை சுந்தரவள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

மோடி

இந்தச் சம்பவம் தொடர்பாக பேராசிரியர் சுந்தரவள்ளியைத் தொடர்புகொண்டு பேசினோம், ``நான் ஆயுதம் குறித்து எந்தக் கருத்தும் பதிவிடவில்லை. எனக்கு அதில் உடன்பாடும் கிடையாது. மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதைத்தான் வரலாறு காட்டிய வழி என்று முகநூலில் பதிவு செய்தேன். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு புகார் அளித்துள்ளனர். அதைச் சட்டப்படி நான் எதிர்கொள்வேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை