``இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பதே என் கருத்து!” - கமல்ஹாசன் | Central government should not force anything says kamalhasan

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (01/06/2019)

கடைசி தொடர்பு:13:30 (01/06/2019)

``இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பதே என் கருத்து!” - கமல்ஹாசன்

 
 
கமல்ஹாசன்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையிலிருந்து அரவக்குறிச்சி செல்வதற்காக விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
 
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், புதிதாக வெளியாகியுள்ள மத்திய அரசின் கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படுவது தொடர்பாகப் பேசினார். அவர்  ``நான் இந்திப் படத்தில் நடித்தவன், இந்தியாவில் அவரவர் மொழியை மதிக்கும் கருத்துடன் சந்தோசமாக வாழ்கின்றனர். ஆனால், இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.
விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
 
முக்கியமாக தமிழர்கள் தம் மொழியை விட்டுவிட்டு இன்னொரு மொழியை இனி ஏற்றுக்கொள்வது என்பது கஷ்டமாக உள்ளது. திணிக்கக் கூடாது என்பதுதான் வேண்டுகோள். இதற்கு முன்பும் இதை அழுத்திச் சொல்லியுள்ளோம். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்கிற பேச்சை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் அப்படி நினைத்ததில்லை.
 
அரவக்குறிச்சி தேர்தலைப் பொறுத்தவரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை சட்டப்படியாக மேற்கொள்வோம். நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு மெஷினில் இருந்த வாக்குகள் காணாமல் போய்விட்டதாக கூறப்படுவதை நான் முழுமையாக நம்பவில்லை. ஆனால், குளறுபடிகள் நடந்திருக்கிறது என்பது உண்மை. அதைக்கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. 
 
மோடியின் வரும் ஐந்தாண்டு கால ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனாக எனது ஆசை" என்றார்.